சாலைகளில் சுற்றித்திரிந்து விபத்துகளை ஏற்படுத்தும் நாய்கள்
மணப்பாறையில் சாலைகளில் சுற்றித்திரிந்து விபத்துகளை ஏற்படுத்தும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணப்பாறையில் சாலைகளில் சுற்றித்திரிந்து விபத்துகளை ஏற்படுத்தும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெரு நாய்கள்
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின் றன. 15-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் செல்வதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
அதுமட்டுமின்றி அந்த நாய்கள் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை விரட்டி, விரட்டி கடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அஞ்சி நடுங்கும் நிலை உள்ளது.
பன்மடங்கு அதிகரிப்பு
சமீப காலமாக நாய்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து விட்டது. அவசர தேவைக்காக சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென நாய்கள் கூட்டம் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நாய்கள் மீதி மோதி விபத்துக்குள்ளாவதும், நாய் மீது மோதாமல் இருக்க முயற்சி செய்து விபத்துக்குள்ளாகி படுகாயம் அடையும் நிகழ்வும் அதிகரித்து விட்டது.
பிடிக்க கோரிக்கை
சில இடங்களில் உயிரிழப்புகளும் நடந்துள்ளதும், பல பேர் தங்களின் உறுப்புக்களை இழந்துள்ளதும் தான் இதில் தாங்கிக் கொள்ள முடியாத துயரம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் சாலையில் சுற்றி திரிந்த நாய்களை பிடித்து செல்லப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின் மீண்டும் விடப்பட்டது. இதனால் நாய்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. ஆனால் சமீபகாலமாக நாய்கள் பிடித்து செல்லப்படாத நிலையில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்கள் பொதுமக்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்து குதறும் சம்பவம் அதிகரித்துள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லால்குடியில் பெருகிய நாய்கள்
இதேபோல் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் தெருநாய்கள் அதிக அளவில் பெருகி சுற்றி திரிகின்றன. இதனால் சிறியவர்கள், பெரியவர்கள் சாலைகளில் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் இந்த நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.