'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' மூலம் மட்டுமே நன்கொடை பெறவேண்டும் -பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' மூலம் மட்டுமே நன்கொடை பெறவேண்டும் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
சென்னை,
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் அதற்கு தேவையான நிதியை பெறுவதற்கு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற திட்டம் அரசால் தொடங்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தில் முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சில பள்ளிகள் நன்கொடை நிதியை நேரடியாக பெறுவதாக கல்வித்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அரசுப்பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது, இலவச நூல்கள், இதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வருகின்றன. அத்தகைய செயல்பாடுகளுக்கு தேவையான நன்கொடை நிதிகளை நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் மூலமாகவே வழங்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
மேலும், அதற்கு பவுண்டேஷன் அனுமதி வழங்கிய பின்னரே தங்கள் மாவட்டத்தில் அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுசார்ந்து அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.