போலி சித்த மருத்துவர்களை நம்பி ஏமாற வேண்டாம்


போலி சித்த மருத்துவர்களை நம்பி ஏமாற வேண்டாம்
x

போலி சித்த மருத்துவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

வேலூர்

அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலூர் மாவட்ட சித்த மருத்துவத்துறை மற்றும் புற்று மகரிஷி சேவா மையம் இணைந்து 6-வது தேசிய சித்த மருத்துவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

வேலூர் ரோட்டரி சங்க தலைவர் திருமாறன், செயலாளர் சரவணன், வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி துணை தலைவர் ஜனார்த்தனன், சித்த மருந்து தயாரிப்பு கூட்டுறவு நிறுவன இயக்குநர் பாஸ்கரன், வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வெங்கடபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் தில்லைவாணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் கொரோனா தொற்று காலத்தில் சித்த மருத்துவம் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இன்றைக்கும் கிராமங்களில் இயற்கை சித்த மருத்துவத்தை பலர் அதிகம் பயன்படுத்துகின்றனர். சிலர் போலியாக சித்த மருத்துவர்கள் என கூறிக்கொண்டு சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது. தவறான சிகிச்சையால் சில உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே மக்கள் போலியான சித்த மருத்துவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

முன்னதாக சித்த மருத்துவத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த சித்த மருத்துவ கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். இதில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயற்கை மற்றும் யோகா மருத்துவத்துறை தலைவர் சஞ்சய்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story