மோசடி நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்; பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு
மோசடி நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மோசடி நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி உத்தரவின்பேரில் போலீசார் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஜவுளிச்சந்தை, பஸ் நிலையம் போன்ற பகுதியில் மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து, ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
அந்த துண்டு பிரசுரத்தில், சமீபகாலமாக ஈமு கோழி, நாட்டு கோழி வளர்ப்பு, கொப்பரை தேங்காய் திட்டம், ஆடு வளர்ப்பு திட்டம், மாத தவணைகளில் வீடு மற்றும் மனை வாங்கும் திட்டம், ஏலச்சீட்டு, அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் வேறு வழிகளில் லாபம் கிடைக்கும் என்ற விளம்பரங்களை பார்த்து மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
மோசடி நிறுவனம்
எனவே, பொதுமக்கள் வங்கி சாரா நிறுவனங்களை கட்டாயமாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்துள்ளதா?, பதிவு செய்யப்பட்டிருந்தால் மக்களிடமிருந்து டெபாசிட் பெறும் உரிமையுள்ள நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா?, டெபாசிட் மீது அந்நிறுவனம் அளிக்கும் வட்டி 12.5 சதவீதத்திற்கு கூடுதலாக இல்லாமல் உள்ளதா?, அதிகபட்ச முதிர்வு காலம் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ளதா?, முதலீடு செய்யப்படும் பணத்திற்கு முறையாக ரசீது வழங்கப்படுகிறதா?, கடன் வாங்குவதாக இருந்தால் நீங்கள் கையெழுத்திட்ட கடன் ஒப்பந்த நகல் உங்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.
மிக அதிக வருமானம் கிடைக்கும் என்று நம்பி மோசடி நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். அதிகாரப்பூர்வமில்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பண சுழற்சி திட்டங்களை நடத்துவோர் பற்றி தகவல் இருந்தால் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலோ அல்லது ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தின் 04242256700 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ புகார் அளிக்கலாம்.
என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.