மண்டல அலுவலகம் கட்டக் கூடாது
கும்பகோணத்தில் பூங்காவை அகற்றி விட்டு மண்டல அலுவலகம் கட்டக் கூடாது என்று நகராட்சி ஆணையரிடம் அனைத்துக்கட்சியினர் மனு அளித்தனர்.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் பூங்காவை அகற்றி விட்டு மண்டல அலுவலகம் கட்டக் கூடாது என்று நகராட்சி ஆணையரிடம் அனைத்துக்கட்சியினர் மனு அளித்தனர்.
பூங்கா
கும்பகோணம் மாநகராட்சி 48- வது வார்டு சாக்கோட்டை சீனிவாச நகர் பகுதியில் சுமார் 500-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்கா கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த பூங்காவில் மூலிகை செடிகள், மரங்கள், சிறுவர்விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. இந்தநிலையில் மாநகராட்சி நிர்வாகம், சீனிவாச நகர் பூங்காவை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் மண்டல அலுவலகம் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோரிக்கை மனு
இந்நிலையில் நேற்று தூய்மை சீனிவாச நகர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் லட்சுமணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-கும்பகோணம் மாநகராட்சி 48-வது வார்டில் உள்ள சீனிவாச நகரில் அமைந்துள்ள பூங்காவை அழித்து விட்டு மண்டல அலுவலகம்கட்டுவதில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் உள்ளது. ஆனால் அந்த பூங்காவை அழித்து விட்டு மண்டலஅலுவலகம் கட்டுவதால் 48-வது வார்டை சேர்ந்த சீனிவாச நகர், சுஜாதா நகர், ஸ்வதிக் நகர், கே.கே. நீலமேகம் நகர்,மாரியம்மன் கோவில் ரோடு, நீடாமங்கலம் ரோடு பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
மாற்று இடத்தில்...
இப்பூங்காவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் யோகா, விளையாட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது தடைபடும். எனவே பூங்காவை அழித்து விட்டு மண்டல அலுவலகம் கட்டுவதற்கான முயற்சியை தவிர்த்து, மாற்று இடத்தில்மண்டல அலுவலகம் கட்ட மறுபரிசீலனை செய்யவேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.கோரிக்கை மனு அளித்த போது முன்னாள் எம்எல்ஏ. ராமநாதன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு சின்னையன், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சதீஷ்குமார், மாவட்ட துணைத்தலைவர் வேதா, மாநகர தலைவர் பொன்ராஜ், விடுதலை தமிழ் புலிகள் கட்சித்தலைவர் அரசன்,நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆனந்த், அ.தி.மு.க. கவுன்சிலர் பத்மகுமரேசன் மற்றும் பலர் இருந்தனர்.