ஆக்சிஜன், சர்க்கரை அளவை சரிபார்க்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்


ஆக்சிஜன், சர்க்கரை அளவை சரிபார்க்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
x
தினத்தந்தி 6 May 2023 9:21 PM IST (Updated: 6 May 2023 9:47 PM IST)
t-max-icont-min-icon

செல்போனில் ஆக்சிஜன், சர்க்கரை, ரத்த அழுத்த அளவை சரிபார்க்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவண்ணாமலை

செல்போனில் ஆக்சிஜன், சர்க்கரை, ரத்த அழுத்த அளவை சரிபார்க்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

செல்போன் செயலி

இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தி விட்டது. இணைய வழியில் தொழில்நுட்பங்களை உபயோகம் செய்து தற்போது பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலானவை செல்போன்களில் பதிவிறக்கப்படும் சில தேவையற்ற செயலிகளாலே நடைபெறுவதாக கூறப்படுகின்றது. சில செயலிகளை பயன்படுத்தி தங்களின் தேவைகளை இணையம் வழியாக கண்டறிந்து ஆசையை தூண்டி பணம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் உணவு பழக்க வழக்க மாற்றத்திற்கு பின்னர் சிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, மூச்சு திணறல் போன்ற சில உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் ரத்த அழுத்தம், சர்க்கரை, மூச்சு திணறல் போன்ற உடல் நல பிரச்சினைக்கு மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே அதை எவ்வாறு சரி செய்யலாம் என்று செல்போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்து கண்டறிந்து வருகின்றனர்.

போலீசார் எச்சரிக்கை

இந்த நிலையில் செல்போனில் ஆக்சிஜன், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அளவை சரிபார்க்கும் எந்தவொரு செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'செல்போனில் ஆக்சிஜன், சர்க்கரை அல்லது ரத்த அழுத்த அளவை சரிபார்க்கும் எந்தவொரு செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். ஏனென்றால் உங்கள் கைரேகை நகலை பயன்படுத்தி கைரேகையுடன் இணைந்து உள்ள ஆதார் மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே கைரேகையை பயன்படுத்தும் செயலியை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது' என்றனர்.


Next Story