மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மாத்திரைகள் வழங்குவது இல்லை
மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மாத்திரைகள் வழங்குவது இல்லை
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு போதுமான மாத்திரை வழங்குவது இல்லை என்றும், அவர்களை கணியூர் சென்று மாத்திைரவாங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
பேரூராட்சி கூட்டம்
மடத்துக்குளம் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கலைவாணி பாலமுரளி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்வது குறித்தும், தேவையான இடங்களில் குடிநீர் தொட்டி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கான சேவை போதிய அளவில் இல்லை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கான மருந்து மற்றும் மாத்திரைகள் கணியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று வாங்கிக் கொள்ளும்படி கூறுகின்றனர். இதனால் நோயாளிகள் அலை க்கழிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் போதிய மருத்துவர்கள் பணியில் இருப்பது இல்லை. இதனால் சிகிச்சை பெறுவது இயலாத காரியமாக உள்ளது.
உடுமலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை
இதற்கு பதில் அளித்து பேரூராட்சி தலைவர் கலைவாணி பேசும்போது "அரசு மருத்துவமனை நிர்வாகத்தினருடன் ஆலோசித்து அனைத்து மாத்திரைகளும் இங்கே வழங்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரவு நேரம் போதிய டாக்டர்கள் பணியில் ஈடுபடுபடுவது குறித்தும் அறிவுறுத்தப்படும். அரசு மருத்துவமனையில் முழுமையான சேவைகள் வழங்க சம்பந்த பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்படும்" என்றார். இதற்கு பின்பு பொதுகுடிநீர் குழாய்கள் அமைப்பது, நால்ரோடு அருகில் கட்டுமான பொருட்கள் சாக்கடைகளில் கொட்டப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை தலைவர் ரங்கநாதன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.