காய்கறிகள் விலை பெரிய அளவில் உயரவில்லை
ஓணம் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காய்கறிகள் விலை பெரிய அளவில் உயராதது விவசாயிகளுக்கு ஏமாற்றமளித்துள்ளது.
போடிப்பட்டி
ஓணம் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காய்கறிகள் விலை பெரிய அளவில் உயராதது விவசாயிகளுக்கு ஏமாற்றமளித்துள்ளது.
நல்ல விலை
கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையானது தமிழக விவசாயிகளுக்கும் ஆனந்தம் தருவதாகவே இருக்கும். ஏனென்றால் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகள் உடுமலை, பொள்ளாச்சி சந்தைகளுக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். மேலும் காய்கறிகளுக்கான தேவையும் அதிக அளவில் இருக்கும். இதனால் அனைத்து காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் ஓணத்தை கணக்கிட்டு விவசாயிகள் அதிக அளவில் காய்கறி சாகுபடி செய்வார்கள். அந்தவகையில் நடப்பு ஆண்டிலும் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி மேற்கொண்டுள்ளதால் தற்போது வரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே பெரிய அளவில் விலை உயரவில்லை.
தக்காளி ரூ.400
கடந்த 20-ந்தேதி முதல் ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் வரும் 29-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். அதன்படி 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக ரூ.400 வரை விற்பனையானது. மேலும் வெண்டை ரூ.15-22, கொத்தவரை ரூ.23-30, பொரியல் தட்டை ரூ.30-45, பந்தல் பீர்க்கங்காய் ரூ.43-52, பாகற்காய் ரூ.22-27, சுரைக்காய் ரூ.12-14, அரசாணி பூசணி ரூ.7-10, வெள்ளை பூசணி ரூ.8-9, முருங்கை ரூ.22-28, உருண்ட மிளகாய் ரூ.35-40, சம்பா மிளகாய் ரூ.32-38 விலைகளில் விற்பனையானது. ஒருசில காய்கள் மட்டுமே விலை உயர்ந்துள்ள நிலையில் மற்ற காய்களின் விலை உயர்வை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
---------------------