குவியும் குப்பையால் நோய் பரவும் அபாயம்
குவியும் குப்பையால் நோய் பரவும் அபாயம்
திருப்பூர்
திருப்பூர் நல்லூர் அருகே ஜெய் நகர் பகுதியில் உள்ள பல வீதிகளில் குப்பைகள் அதிக அளவில் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
அடிக்கடி தேங்கும் குப்பை
திருப்பூர் நல்லூர் அருகே ஜெய் நகர் உள்ளது. இங்குள்ள பல வீதிகளில் குப்பைகள் சீரான இடைவெளியில் அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இங்கு குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. ஜெய் நகர் 5-வது வீதியிலும் இங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் முன் பகுதியில் உள்ள ரோட்டிலும் குப்பைகள் அதிக அளவில் உள்ளன. இதேபோல், பள்ளியின் பின் பகுதியில் உள்ள ரோட்டிலும் குப்பைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு குப்பை அடிக்கடி தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அது மட்டுமின்றி குப்பைகளுக்கு அவ்வப்போது தீ வைக்கப்படுவதால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
நோய் அபாயம்
இதேபோல் இந்த குப்பைகளில் பலதரப்பட்ட கழிவுகள் கிடப்பதால் தீ வைக்கப்படும் நேரங்களில் நச்சு கலந்த காற்றும் வருகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ரோட்டோரத்தில் திறந்த வெளியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் காற்றில் பறக்கின்றன. இதேபோல் இரைதேடி வரும் நாய்கள் குப்பைகளை கிளறுவதாலும் ரோட்டில் குப்பைகள் பரவி கிடக்கின்றன. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு சுற்றுவட்டார பகுதியில் குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். குறிப்பாக பள்ளியின் சுற்றுவட்டார பகுதியில் குப்பை தேங்குவது மாணவ, மாணவிகளுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
எனவே, இங்கு குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே இனியாவது ஜெய் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
----------
(படங்கள் உண்டு).
பள்ளியின் முன் பகுதியில் உள்ள ரோட்டில் குவிந்து கிடக்கும் குப்பை.
பள்ளியின் பின் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை.
ஜெய் நகர் 5-வது வீதியில் தேங்கி கிடக்கும் குப்பை.
---