டிக்கெட் கவுண்ட்டர்களில் காத்திருக்க வேண்டாம்:'முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற செயலியை பயன்படுத்துங்கள்'-பயணிகளுக்கு, ரெயில்வே வணிக மேலாளர் வேண்டுகோள்
டிக்கெட் கவுண்ட்டர்களில் காத்திருக்க வேண்டாம் எனவும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற செயலியை பயன்படுத்துங்கள் என்று சேலம் ரெயில்வே கோட்ட வணிக மேலாளர் கூறியுள்ளார்.
சூரமங்கலம்:
சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
யு.டி.எஸ். செயலி
சேலம் ரெயில்வே கோட்டத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் பசுமையை நோக்கிய பயணத்தில் பேப்பர் இல்லாத டிக்கெட் நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளையும், மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ளும் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு செயலில் உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. எனவே யு.டி.எஸ். எனும் செயலியை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் அதன் மூலம் முன்பதிவு இல்லா ெரயில் டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட் புதுப்பித்தல் உள்ளிட்ட வசதியை சில விநாடிகளில் செய்து கொள்ள முடியும்.
காத்திருக்க வேண்டாம்
ரெயில் நிலையத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவிலும், 20 கிலோ மீட்டர் சுற்றளவிலும் மட்டுமே இந்த செயலியின் மூலம் டிக்கெட்டுகளை பெற முடியும். ெரயில் நிலையங்களில் உள்ள 'க்யூ ஆர் கோடு' ஸ்கேன் செய்தும் டிக்கெட்டுகளை பெற முடியும்.
ஆனால் ரெயில் நிலையத்தில் இருந்தபடியே இந்த செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற முடியாது. புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்களிலும் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. வாலட், வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
தானியங்கி எந்திரங்கள்
சேலம் கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 8 லட்சத்து 8 ஆயிரம் பயணிகள் 17 லட்சத்து 36 ஆயிரம் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர். இதில் 2 லட்சத்து 18 ஆயிரம் பயணிகள் மட்டுமே டிஜிட்டல் முறையில் டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர்.
சேலம் கோட்டத்தில் ெரயில் டிக்கெட்டுகளுக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்க 13 தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 12 எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதிலும், நேரடியாகவோ அல்லது அங்கு நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலரிடமோ டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.,