"ரெயில் விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை" விபத்துக்கு பொறுப்பேற்க போவது யார்? - ஆ.ராசா கேள்வி
ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்க போவது யார்?" என திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
ஒடிசா ரெயில் விபத்து குறித்து திமுக எம்.பி ஆ.ராசா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 290-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசா மாநில முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். தொடர்ந்து அமைச்சர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தார். சென்னைக்கு வரவேண்டியவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்மண்டல ரெயில்வே கன்ட்ரோல் அறையுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்திய துணை கண்டத்தை உலுக்கிய விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உடல்கள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
திமுகவோ, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ இந்த விவகாரத்தை அரசியல்படுத்த விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் இந்தியாவின் பழைய வரலாறு சொல்வது இதுபோன்ற விபத்துகளின்போது அந்தந்த அமைச்சர்கள் பொறுப் பேற்றிருக்கிறார்கள். லால் பகதூர் சாஸ்திரி, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவர். மம்தா பானர்ஜி எங்களின் திட்டத்தை நீங்கள் கவாச் என பெயர் மாற்றினீர்கள்.
இந்த கோர விபத்திற்கு யார் காரணம்? நிர்வாகமா? தனி மனிதரா? தமிழ்நாட்டில் சிறிய விஷயம் நடந்தாலும் உடனே முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்லும் பாஜக இதுவரை ஏன் வாயை திறக்கவில்லை. வந்தே பாரத் என்ற ரெயிலை தொடங்கும்போது நேரடியாக அங்கு சென்று விளம்பரம் தேடும் பிரதமர் மோடி இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை?. தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் நடந்த இந்த விபத்துக்கு பொறுப்பேற்க போவது யார்?
இவ்வாறு அவர் கூறினார்.