1,200 புதிய வீடுகளுக்கு கதவு எண்கள்
ஓவேலியில் புதிதாக கட்டப்பட்ட 1,200 வீடுகளுக்கு கதவு எண்கள் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித்திடம், பேரூராட்சி தலைவர் நேரில் முறையிட்டார்.
கூடலூர்
ஓவேலியில் புதிதாக கட்டப்பட்ட 1,200 வீடுகளுக்கு கதவு எண்கள் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித்திடம், பேரூராட்சி தலைவர் நேரில் முறையிட்டார்.
கட்டிடங்களுக்கு வரி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை, ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஓவேலி பேரூராட்சி 103.55 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 59 கிராமங்களை கொண்டது. இங்கு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,943 பேர் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் பெரும்பான்மையாக தாயகம் திரும்பிய தமிழர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் உள்ளனர். 6,954 வீடுகள், வணிக நிறுவனங்கள், 6 தொழிற்சாலைகள் உள்ளது. மொத்தம் 7,020 கட்டிடங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
கதவு எண்கள் இல்லை
இந்த பேரூராட்சியில் கடந்த 2006-ம் ஆண்டு 6,792 வீடுகள், கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. பின்னர் மன்றத்தின் மூலமாக பலமுறை கோரிக்கை விடப்பட்டதன் காரணமாக 2008-ம் ஆண்டு 228 பேருக்கு புதிய வீடுகள் கட்ட கதவு எண்கள் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் புதிய வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு கதவு எண்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் மின் இணைப்புகள் பெற முடியாமல் உள்ளது. மேலும் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.
ஒரு கிராமத்தில் பல வீடுகளில் மின் இணைப்புகள் இருந்து அங்கு உள்ள குழந்தைகள் கல்வியில் முன்னேறி வருகின்றனர். ஆனால் அதே கிராமத்தில் மின் இணைப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குழந்தைகள், கல்வி வசதி இல்லாமல் பின்தங்கி வருகின்றனர்.
நடவடிக்கை
இதனால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளிடம் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை நிலவி வருகிறது. இன்றைய சூழலில் பேரூராட்சி பகுதியில் புதியதாக 1,200 வீடுகள் கட்டப்பட்டு கதவு எண்கள் இல்லாமல் உள்ளது. எனவே புதிய வீடுகளுக்கு கதவு எண்கள் வழங்கினால் பேரூராட்சிக்கு கணிசமான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
தொடர்ந்து பொதுமக்கள் மின் இணைப்பு பெறுவதால் மின் வாரியத்துக்கும் வருவாய் கிடைக்கும். எனவே பொதுமக்களின் நலன் கருதி பேரூராட்சியில் புதிய வீடுகளுக்கு கதவு எண்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.