'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி
ஆதியூர் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் சேகரிக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்
'நம்ம ஊரு சூப்பரு' திட்டம்
கந்திலி ஊராட்சி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத, குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக பொது மக்களுக்கு குப்பை தொட்டிகளை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் வழங்கினார். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு 'நம்ம ஊரு சூப்பரு', 'சுற்றுச்சூழல் சூப்பரு', 'சுகாதாரம் சூப்பரு', திடக்கழிவு மேலாண்மை குறித்து துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.
மேலும் அங்கன்வாடி மையத்தில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினையும், தூய்மை பணியாளருக்கு சிகிச்சை அளிக்கும் பணியினையும் பார்வையிட்டு, செடிகளை நட்டு வைத்தார்கள்.
பின்னர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:-
தரம்பிரித்து வழங்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் பொது மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
சாலைகள், நீர்நிலைகளில் உள்ள திடக்கழிவுகளையும் தூய்மை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் கதர் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்-அமைச்சர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
அனைவரும் அதிக அளவில் மரங்களை நட வேண்டும். இதன் மூலம் ஆக்சிஜன் அதிகமாக கிடைக்கும்.
நமது பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் தீமைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். நாம் வாழ்கின்ற பகுதியில் பிளாஸ்டிக்கை அறவே தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், நேரு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் குணசேகரன், ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்த்குமார், துணைத் தலைவர் ஏ.பி.பழனிவேல், தூய்மை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வினோத், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் பி.கோபிநாதன் நன்றி கூறினார்.