வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்


வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 3 Jan 2023 5:53 PM IST (Updated: 3 Jan 2023 5:54 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. பரிசு தொகுப்பு வழங்குவதில் முறைகேடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. பரிசு தொகுப்பு வழங்குவதில் முறைகேடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்க அரசு ஆணையிட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவரும் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறும் வகையில் நாளொன்றுக்கு 200 ரேஷன் அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்களுக்கு குறிப்பிட்ட டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

இந்த டோக்கன்கள் வழங்கும் பணி வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

கட்டுப்பாட்டை அறை எண்

இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1627 நியாய விலை கடைகளை சேர்ந்த 7 லட்சத்து 85 ஆயிரத்து 760 ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற உள்ளனர்.

ஒரு ரேஷன் அட்டைக்கு ஒருவர் மட்டுமே பரிசு தொகுப்பு வாங்க வர வேண்டும். பரிசு தொகுப்புகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளும் உரிய நேரத்தில் திறக்கப்படும்.

பரிசு தொகுப்பு பெறுவதற்கு வருகிற வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 041750-233063 என்ற எண்ணிற்கோ அல்லது மாவட்ட அளவில் தாலுகா வாரியாக உதவி கலெக்டர் நிலையில் நியமனம் செய்யப்பட்டு உள்ள கண்காணிப்பு அலுவலர்களின் செல்போன் எண்ணிற்கோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story