மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கலெக்டர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கணேசன் தலைமையில், ஆத்தூர் தாலுகா முன்னிலைக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் திருவிழா காலங்களில் கரகம் எடுக்கவும், சாமி சிலைகளை வைத்து பூஜை செய்யவும் பயன்படுத்தும் பொது இடத்திற்கு மற்றொரு பிரிவினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினருக்கு இடையேமோதல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அந்த பட்டாவை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரட்டிப்பு ஊக்கத்தொகை
இதைத்தொடர்ந்து பட்டிவீரன்பட்டியை சேர்ந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூடைப்பந்து பயிற்சியாளர் ரமேஷ்பாபு கொடுத்த மனுவில், மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கூடைப்பந்து போட்டியில் தமிழக கூடைப்பந்து அணியினர் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
திண்டுக்கல்லை சேர்ந்த ஜெஸ்டின் ராஜ்குமார் கொடுத்த மனுவில், திண்டுக்கல்லில் செயல்பட்ட ஒரு தோல் தொழிற்சாலை கழிவுகள் ஓடையில் கலப்பதால் அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அந்த தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
குண்டும், குழியுமான சாலை
வேடசந்தூர் தாலுகா பாடியூரை சேர்ந்த சேகர் கொடுத்த மனுவில், பாடியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி யுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் தாங்கள் பயன்படுத்தும் நிலத்துக்கு பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
297 மனுக்கள்
மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 297 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு செயல்படுத்தப்பட்டு வரும் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு சிறிய நிறுவனம் தொடங்க மானியத்துடன் ரூ.19 லட்சத்து 85 ஆயிரம் கடன் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.