இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளது-டி.டி.வி.தினகரன் பேட்டி
இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளது என்று நெல்லையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளது என்று நெல்லையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
பேட்டி
நெல்லையில் நேற்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பது போல் அ.தி.மு.க.வும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதாவின் நிலைப்பாடு அறிவிப்புக்கு பின் முடிவு எடுப்பதாக கூறியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குறிக்கோள். இதற்காக இரவு, பகல் பாராது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.
பேனா நினைவு சின்னம்
கருணாநிதி மிகப்பெரிய அறிஞர். அவருடைய நினைவாக பேனா சின்னம் வைப்பது தவறில்லை. ஆனால் கடும் நிதி நெருக்கடியான இந்த நேரத்தில் பேனா சின்னம் வைப்பது தான் தவறு.
வேண்டுமென்றால் அவர்கள் கட்சி சார்பில் பேனா நினைவு சின்னத்தை வைக்கலாம். கடலில் வைத்து சுற்றுச்சூழல் பாதிக்காமல் அறிவாலயத்திலோ அல்லது வேறு அவர்களுடைய சொந்த இடத்திலேயோ வைக்க வேண்டும்.
இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து கையெழுத்து போட்டால் தான் இரட்டை இலை கிடைக்கும். இருவரும் இணைந்து கையெழுத்து போடவில்லை என்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இதற்கு தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.
2017-ம் ஆண்டு நான் போட்டியிடும்போது இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அந்த நிலை தான் தற்போதும் வருவதற்கு வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க. பலவீனம்
ஒரு சிலருடைய சுயநலத்திற்காக அ.தி.மு.க. இன்று பலவீனம் அடைந்துள்ளது. இது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. சுயநலத்தோடும், பணபலத்தாலும் சிலர் செயல்படுவதால் தான் 5 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்டோம்.
கடந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வருங்காலத்தில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு போராடுகிறோம். தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் விரைவில் வரும்.
காங்கிரசுக்கு கசக்கிறது
பா.ஜனதா, அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரஸ் கட்சிக்கு கசக்கிறது. ஏனென்றால் தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக்கொண்டிருக்கிறது.
களத்தில் தனியாக இறங்கி நின்று காங்கிரஸ் போட்டியிட்டால் அவர்களது நிலை தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.