நெல்லை-மேலப்பாளையம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தாமதம்


நெல்லை-மேலப்பாளையம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தாமதம்
x

நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நெல்லை- மேலப்பாளையம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி

தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

அகல ரெயில் பாதை

இதில் மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி இடையே 159 கிலோ மீட்டர் தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி- நெல்லை- நாகர்கோவில் இடையே 102 கிலோ மீட்டர் தூரம் மற்றொரு திட்டமாகவும், கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இடையே 87 கிலோ மீட்டர் தூரம் வேறொரு திட்டமாகவும் அறிவிக்கப்பட்டது.

இதில் சென்னை முதல் நெல்லை வரையும், மேலப்பாளையம்- ஆரல்வாய்மொழி, வாஞ்சி மணியாச்சி- மீளவிட்டான் இடையே இரட்டை அகல ெரயில் பாதை பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

நிலம் கையகப்படுத்தும் பணி

இதில் நெல்லை- மேலப்பாளையம் இடையே 3.6 கிலோ மீட்டர் தூரம் மட்டும் பணிகள் முடங்கி கிடக்கிறது. இந்த பணிகளை வருகிற ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் இந்த பணியில் தாமதம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் மதகனேரியை சேர்ந்த வரதன் அனந்தப்பன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஆர்.வி.என்.எல். தலைமை பொது தகவல் அலுவலர் கைலாஷ் குமார் பதில் அளித்து உள்ளார். அதில் கூறிஇருப்பதாவது:-

இலக்கு நீட்டிப்பு

நெல்லை- மேலப்பாளையம் இடையே நடைபெறும் இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் பணியுடன் சேர்த்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 'யார்டு' மேம்படுத்துதல் பணியும் செய்யப்படும். வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தற்போது இங்கு 60 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. அதாவது அனைத்து சிறிய மற்றும் பெரிய பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. அந்த பகுதியில் தண்டவாளம் அமைப்பதற்கான மண் அடித்தளம் தயார் செய்யப்பட்டு, 90 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது.

சந்திப்பு ரெயில் நிலையம் யார்டு பகுதியில் தண்டவாள பாதைகளை இணைத்தல், ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு பிரிந்து செல்லும் வகையிலான தண்டவாளங்களை அமைத்தல், சிக்னல் கம்பங்கள் அமைத்தல், உயர்மட்ட மின் ஒயர்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளது. அதற்கு 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படாமல் உள்ளதுதான் காரணம் ஆகும். நெல்லை மாவட்டத்தில் ரெயில்வே திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.62.65 கோடி மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக 3 நடைமேடை தேவை

இதுகுறித்து வரதன் அனந்தப்பன் கூறுகையில், ''தற்போது சென்னையிலிருந்து நெல்லை வரை இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் மதுரையில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் நெல்லை ரெயில் நிலையத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. நாகர்கோவிலில் இருந்து நெல்லை வரும் ரெயில்கள் மேலப்பாளையம் நிலையத்தில் காத்து கிடக்கும் நிலை உள்ளது. மேலும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் போதுமான நடைமேடைகள் இல்லாததால் செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சியில் இருந்து வரும் ரெயில்களை ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்க முடியாமல் திணறி வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் நிலத்தினை கையகப்படுத்தி தெற்கு ரெயில்வேக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் நெல்லை- மேலப்பாளையம் இரட்டை ரெயில் பாதை பணிகள் உடனடியாக முடிக்கப்பட்டு நெல்லை ரயில் நிலைய யார்டு பகுதி மேம்படுத்தப்பட வேண்டும். நெல்லை ரெயில் நிலையத்தில் மேலும் 3 நடைமேடைகள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும்'' என்றார்.


Next Story