புதுப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
களக்காடு அருகே புதுப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
களக்காடு:
களக்காடு அருகே கீழ சடையமான்குளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் கிப்டா அனி ரஞ்சனி (வயது 24). என்ஜினீயரான இவருக்கும், தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த பட்டதாரியான ஜெபஸ்டின்ராஜிக்கும் (28) கடந்த 9.9.2022 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது கிப்டா அனி ரஞ்சனிக்கு பெற்றோர் 43 பவுன் தங்க நகைகளும், ரூ.2½ லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுத்தனர். திருமணத்துக்கு பின்னர் கிப்டா அனி ரஞ்சனி புதுக்கோட்டையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தார். தொடர்ந்து ஜெபஸ்டின் ராஜ் பெங்களூருக்கு வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் திருமணத்தின்போது வழங்கிய நகைகளில் 2 பவுன் குறைவதாக கூறியும், கூடுதல் வரதட்சணை கேட்டும் கிப்டா அனி ரஞ்சனியை மாமனார் ஜான் சுந்தர், மாமியார் மேரி ராஜம்மாள் ஆகியோர் தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கீழ சடையமான்குளத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்ற கிப்டா அனி ரஞ்சனியை ஜெபஸ்டின் ராஜ் பெற்றோருடன் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஜெபஸ்டின் ராஜ், அவருடைய தந்தை ஜான்சுந்தர், தாயார் மேரி ராஜம்மாள் ஆகிய 3 பேர் மீது நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.