வரதட்சணை கொடுமை: மண்எண்ணெய் ஊற்றி தீவைக்கப்பட்ட பெண் சாவு
குரும்பூர் அருகே மண்எண்ணெய் ஊற்றி தீவைக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவருடைய கணவர், மாமனார், மாமியார் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல கடம்பாவை சேர்ந்தவர் சந்தனம் மகன் முத்துக்குமார் (வயது 34). இவருக்கும், ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த பாப்பா (35) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பாப்பாவிடம் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு செய்தனர். அப்போது கணவர் முத்துக்குமார், மாமனார் சந்தனம், மாமியார் சந்திரபுஷ்பம் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாப்பா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே அவர் குரும்பூர் போலீசாரிடம், என்னை கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு ெகாடுமை செய்தனர். மேலும் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி, என் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர் என்று வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக, அவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் முத்துக்குமாரை கைது செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாப்பா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.