ஆன்லைன் சூதாட்டத்துக்கு அவசர தடை சட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


ஆன்லைன் சூதாட்டத்துக்கு அவசர தடை சட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மிகப்பெரிய உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும் என்று 2016-ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக டாக்டர் ராமதாஸ் போராடி வருகிறார். அதன் பயனாகத் தான் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும் என்று 5.11.2020 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து 21.11.2020 அன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. முந்தைய அ.தி.மு.க. அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தில் சில பிழைகள் இருந்தன என்பது உண்மை தான்.

அதனால் தான் அந்த சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அத்துடன் ரத்து செய்யப்பட்ட சட்டத்தில் உள்ள பிழைகளை சரி செய்து, திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. புதிய சட்டத்தை உடனே நிறைவேற்றவேண்டும் என்று 4.8.2021 அன்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.

அடுத்த சில மணி நேரங்களில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட சட்ட அமைச்சர் ரகுபதி, '' ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்தை எந்த தாமதமும் இன்றி நிறைவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார்'' என்று கூறியிருந்தார். தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த 10 நாட்களில், அதாவது ஆகஸ்டு 13-ந்தேதி தொடங்கிய பேரவை கூட்டத்திலேயே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்றியிருக்கலாம்.

வரவேற்பு

ஆனால், செப்டம்பர் 13-ந் தேதி வரை 22 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெற்றும் கூட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதுபற்றி அமைச்சர் ரகுபதியிடம் கேட்டபோது, '' ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து புதிய சட்டம் இயற்றப்போவதில்லை. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போகிறோம்'' என்று கூறினார். கடந்த மார்ச் 22-ந் தேதி சட்டப்பேரவையில் இதுகுறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசும்போதும் அமைச்சர் ரகுபதி இதையே கூறினார். முதல்-அமைச்சரும் பல்வேறு தருணங்களில் இதையே கூறியிருக்கிறார். ஆனால் மேல்முறையீடு செய்வதாக கூறி 8 மாதங்களுக்கு மேலாகியும் சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு இன்னும் விசாரணைக்கு கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. மாறாக, தற்கொலைகள் தான் தொடர்கின்றன.

சென்னை ஐகோர்ட்டால் பிழையான சட்டம் என்று கூறப்பட்ட சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் பாதுகாக்கப்போவதாக கூறி வந்த தமிழக அரசு, இப்போது புதிய ஆன்லைன் தடை சட்டத்தை இயற்றப் போவதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால், இது தடுமாற்றமாகி விடக்கூடாது. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும் வரை எந்த நாளில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வார்கள், எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.

அவசர சட்டம்

எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தால், புதிய தடை சட்டத்தை இயற்றுவதற்காக அக்டோபர் -நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்துக்காக காத்திருக்க தேவையில்லை. அதற்கு இன்னும் 5, 6 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் ஆன்லைன் சூதாட்டம் சரி செய்யமுடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஐகோர்ட்டு அறிவுறுத்தியது போன்ற புதிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ஒரு வாரத்துக்குள் வரைவு செய்யமுடியும் எனும் நிலையில், அதை உடனடியாக தயாரித்து அடுத்த 2 வாரங்களில் அவசர சட்டமாக பிறப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story