வன்னியர்கள் முன்னேற்றம் பெறும் வரை ஓய்வில்லாமல் உழைப்போம் டாக்டா் ராமதாஸ் உறுதி
வன்னியர்கள் முன்னேற்றம் பெறும் வரை ஓய்வில்லாமல் உழைப்போம் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.
திண்டிவனம்,
வன்னியர் சங்க 44-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடியேற்று நிகழ்ச்சி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. ரவி ராஜ், சமூக நீதி மாநில செயலாளர் வக்கீல் பாலாஜி, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் தர்மன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்து பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பேட்டி
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இது ஒரு பொன்னாள், இதே நாளில் 1980-ம் ஆண்டு ஊமை மக்களுக்காக மிக மிக பிற்படுத்தப்பட்ட வன்னிய மக்களுக்காக வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது.
44-ம் ஆண்டில் பல்வேறு சோதனைகள் முள் பாதைகளை கடந்து நாங்கள் வந்தாலும், அந்த முள் பாதையை மலர் பாதையாக மாற்றி உள்ளோம். என்ன நோக்கத்திற்காக வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதோ அது இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.
நலமுடன் வாழ உறுதி
எந்தவித சோதனைகள், வேதனைகள் ஏற்பட்டாலும் வன்னியர்களுக்காக எல்லா வகையிலும் முன்னேற்றம் பெறும் வரையில் ஓய்வில்லாமல் உழைப்போம். எங்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. இந்நாளில் வன்னியர் இன மக்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் நலமுடன் வாழ உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள மாநில வன்னியர் சங்க அலுவலகம் முன்பு மாநில வன்னியர் சங்க பொதுச்செயலாளர் கருணாநிதி தலைமையில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.