டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து வேடிக்கையானது


டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து வேடிக்கையானது
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமாயணம், மகாபாரதம் படித்தால் பிரசவம் எளிமையாக இருக்கும் என்ற டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து வேடிக்கையானது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் இயக்குனர் அமுதவள்ளி, மாவட்ட கலெக்டர் பழனி, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து 4 மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நலத்திட்ட உதவிகள்

அப்போது பெண்கள், குழந்தைகளின் நலன் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் தகுதியான நபர்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். பெண்கள், முதியோர், குழந்தைகள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லாமல் அவ்வப்போது இல்லங்களை ஆய்வு செய்து முறையாக இயங்குகிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம அளவிலான குழு அமைக்க வேண்டும். செறிவூட்டப்பட்ட பிஸ்கட் தகுதியான குழந்தைகளுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, 164 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் அமர்குஷ்வா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குனர் ஜெயலட்சுமி, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

89 காப்பகங்கள் மூடல்

அதன் பின்னர் அமைச்சர் கீதாஜீவன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, உரிய உரிமம் பெறாமல் இயங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 89 காப்பகங்கள் மூடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, காவல்துறை சார்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, திருச்சி போன்ற இடங்களில், பணிபுரியும் மகளிருக்கான கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக விழுப்புரத்திலும் உரிய வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் கட்டித்தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்திருப்பது, எப்படி என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில், மக்களுடைய முடிவு அடிப்படையில்தான், தமிழக அரசு உள்ளது. கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் ராமாயணம், மகாபாரதம் படித்தால் அவர்களுக்கு பிரசவம் எளிதாக இருக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது, ஒரு மருத்துவராக இருந்து அவர் இப்படி பேசுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story