தென் இந்திய அழகியாக குமரியை சேர்ந்த டாக்டர் தோ்வு
தென் இந்திய அழகி பட்டத்தை குமரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வென்றார். இதை அவரது உறவினர்கள் 'கேக்' வெட்டி கொண்டாடினர்.
நாகர்கோவில்:
தென் இந்திய அழகி பட்டத்தை குமரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வென்றார். இதை அவரது உறவினர்கள் 'கேக்' வெட்டி கொண்டாடினர்.
குமரியை சேர்ந்த டாக்டர்
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தளவாய்புரம் புனித அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் நிஷோஜா (வயது 21). இவர் கர்நாடக மாநிலத்தில் மருத்துவ படிப்பு படித்து முடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அகில இந்திய அழகிப்போட்டியில் பங்ேகற்றார். அதில் தமிழ்நாடு அளவில் ரன்னராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் இறுதிக்கட்ட போட்டி கடந்த 17, 18-ந் தேதிகளில் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 35 பேர் பங்கேற்றனர். அதில் தென் இந்திய அழகி பட்டத்தை நிஷோஜா வென்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற நிஷோஜாவுக்கு தென் இந்திய அழகிக்காக கிரீடம் மற்றும் சான்றிதழ், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
நடிப்பில் ஆர்வம்
இந்தநிலையில் தென் இந்திய அழகி பட்டம் பெற்ற நிஷோஜா சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு வந்தார். அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வெற்றியை கொண்டாடும் விதமாக நிஷோஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டில் 'கேக்' வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அழகி போட்டியில் வென்றது குறித்து நிஷோஜா கூறியதாவது:-
நான் டாக்டருக்கு படித்துள்ளேன். அது எனது தொழில். அதுமட்டுமின்றி பேஷன்ஷோ மற்றும் நடிப்பிலும் எனக்கு ஆர்வம் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளேன். ஓரிரு குறும்படங்களும் நடித்துள்ளேன்.
இதைத்தொடா்ந்து ஜெய்ப்பூரில் நடந்த மிஸ் இந்திய அழகி போட்டியில் பங்கேற்று தென் இந்திய அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நிறத்தை பார்க்கவில்லை
முதலில் அழகி போட்டி என்றால் அனைவரும் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மிகவும் அழகாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். ஆனால் அழகி போட்டி என்பது புற அழகும், நமது அறிவு மற்றும் திறமை சார்ந்தது. நான் புது நிறமாக (டஸ்கி ஸ்கின்) இருந்த போதிலும், போட்டியில் எனது தனித்திறமையை வெளிப்படுத்தினேன். போட்டியில் பல சுற்றுகள் நடந்தது.
அழகி போட்டியில் அழகுடன் சேர்ந்து திறமைகளையும் பார்த்தனர். அழகு மற்றும் தனித்திறமைகள் அடிப்படையில் இந்த போட்டியில் நான் வெற்றி பெற்றுள்ளேன். அழகி போட்டிக்கு நிறம் முக்கியம்தான். அதைவிட நமது தனித்திறமைகள் மிகமுக்கியம். நான் அவர்களிடம் இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 5 மொழிகளிலும் பேசினேன்.
ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்றால் தைரியமாக இறங்க வேண்டும். கூச்சமோ, தாழ்வு மனப்பான்மையோ இருக்கவே கூடாது. யார் என்ன சொன்னாலும் சரி நாம் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பிறரிடம் ஆயிரம் கருத்துகளை கேட்க வேண்டும். ஆனால் முடிவு நாம் தான் எடுக்க வேண்டும். மருத்துவம் மற்றும் மாடலிங், சினிமா ஆகிய துறைகளில் சாதிக்க நினைக்கிறேன். அதற்கான தொடர் முயற்சியில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.