தொழில் முனைவோர்களுக்கு ரூ.16 லட்சத்திற்கான வரைவோலை


தொழில் முனைவோர்களுக்கு ரூ.16 லட்சத்திற்கான வரைவோலை
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.16 லட்சத்திற்கான வரைவோலையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

நாகப்பட்டினம்


வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.16 லட்சத்திற்கான வரைவோலையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்களுக்கான இணை மானிய நிதி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், நாகை மாவட்டத்தில் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் 53 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஊரக தொழில் முனைவுகள் உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கமாகும்.

இணை மானிய நிதி

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் ஊரக பகுதிகளில் ஏற்கனவே தொழில் செய்து வருவோர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களை கண்டறிந்து தொழில் குறித்த ஆலோசனைகள் மற்றும் வணிக திட்டம் தயாரித்தல் போன்றவை மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலமாக செய்து தருவதோடு தொழில்திட்டத்தின் அடிப்படையில் 30 சதவீதம் மானியத்துடன் வங்கிகள் வாயிலாக கடன் பெற்று தரப்படுகிறது.

அதன் அடிப்படையில் இணை மானிய நிதி கோரி விண்ணப்பித்தவர்களுக்கு வணிக திட்டம் மற்றும் தொழில் கடன் பெறுவதற்கு அனைத்து விதமான சான்றிதழ்கள் மற்றும் வணிக ஆலோசனைகள் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வட்டார மற்றும் மாவட்ட தேர்வு குழு மூலமாக தொழில் முனைவோர்களுக்கு கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ள நபர்களுக்கு இணை மானிய நிதி கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகள் வாயிலாக இணை மானிய நிதி வங்கி கடன் பெற்று தரப்படுகிறது. இதன் அடிப்படையில் அனைத்து வங்கியாளர்களுக்கான இணை மானிய நிதி குறித்து பயிற்சி வழங்கப்பட்டது என்றார்.

தொழில் முனைவோர்களுக்கு வரைவோலை

தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், வங்கியாளர்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டதின் மூலம் பயன்பெறும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் விருப்பத்திகேற்ப தொழில் தொடங்க ஏதுவாக இணை மானிய நிதி மூலம் வங்கி கடனை விரைவாக வழங்கி தொழில் முனைவோர்கள் பயன்படுவதோடு, அவர்களை சார்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதோடு திட்டத்திற்கும், தொழில் முனைவோர்களுக்கும் இணை பாலமாக செயல்பட வேண்டும் என்று வங்கியாளர்களை கேட்டுக்கொண்டார். அதையடுத்து பயிற்சியில் கலந்துகொண்ட வங்கியாளர்களுக்கு நினைவு பரிசும், இணைமானிய நிதி திட்டம் குறித்த கையேடுகளும் வழங்கினார். மேலும் 4 தொழில் முனைவோர்களுக்கு ரூ.16 லட்சத்திற்கான வரைவோலைகளை வழங்கினார்.

பயிற்சியின் நோக்கம்

வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன், வங்கியாளர்களையும், அரசு துறை அலுவர்களையும் வரவேற்று திட்டதின் நோக்கம் மற்றும் பயிற்சியின் நோக்கம் குறித்தும் விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய இயக்குனர் ரமணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனர் நடராஜன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர்கள் சுமதி, இளநங்கையரசி, மகேஸ்வரதேவன் மற்றும் வங்கியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story