வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்


வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, வேளாண்மை துறை இணை இயக்குனர் அகண்ட ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருள் அரசு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சரபோஜி:- பொதுப்பணித்துறை மூலமாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் விரைந்து தொடங்க வேண்டும். ஏ.பி.சி. வாய்க்கால்கள் தூர் வாரும்போதே கரைகளில் உயரமான மண் மேடுகளை அமைக்க வேண்டும். 2022-23-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும். மாவட்டத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளைசரி செய்ய வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

மணியன்:-கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக கருப்பம்புலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்ச்செல்வன்:-நாகை மாவட்டத்தில் வாய்க்கால் வெட்டும் பணியின் திட்ட மதிப்பீடு விவரம் அடங்கிய விளம்பர பதாகைகளை வைத்து முறையாக செய்ய வேண்டும்.

முஜிபு ஷெரிக்:-வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வணிக வங்கி தொடங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் இடைத்தரகர்களின் குறுக்கீட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு குழு

கமல்ராம்:-தலைஞாயிறு ஆலடி வாய்க்காலை நடப்பாண்டிலேயே சிறப்பு நிதி ஒதுக்கி தூர்வார வேண்டும். உரிய தகுதியின்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்களை களைய வருவாய்த்துறை, போலீஸ் துறை அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் முதல், வணிக நிறுவனங்கள் வரை உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story