ராஜாமடம் கிளை வாய்க்கால் தூர்வாரப்பட்டது


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ராஜாமடம் கிளை வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் 700 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

கரம்பயம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ராஜாமடம் கிளை வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் 700 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதர் மண்டி கிடந்த வாய்க்கால்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரகுறிச்சி - ஆலடிக்குமுளை இரண்டு ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் ராஜா மடம் கிளை வாய்க்கால் ஓடுகிறது. இந்த கிளை வாய்க்கால் மூலம் 700 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் வாய்க்காலில் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இதனால் வாய்க்காலே தெரியாதபடி காடு போன்று காட்சி அளித்தது.

விவசாயிகள் கோரிக்கை

இந்த வாய்க்கால் மூலம் பாளமுத்தி ஊராட்சியில் தொடங்கி நறுவழி கொல்லை வழியாக ஆலடிக்குமுளை ஊராட்சி, வீர குறிச்சி ஊராட்சிகளுக்கு வந்து சூராங்காடு குளம், சூரப்பள்ளம் குளம், வீரக்குறிச்சி குளம் ஆகிய குளங்களில் தண்ணீர் நிரம்பும்.

வாய்க்கால் புதர் மண்டி காணப்பட்டதால் மேட்டூர் தண்ணீர் வயல்களுக்கு வர முடியாத நிலை இருந்து வந்தது.. எனவே வாய்க்காலில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி விட்டு தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தூர்வாரப்பட்டது

இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை கல்லணை கால்வாய் கோட்ட அதிகாரிகள் வாய்க்காலில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூர்வாரினர்.

அதனைத் தொடர்ந்து வாய்க்காலை தூர்வாரிய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதால் இதன் மூலம் 700 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Next Story