ரெயில் தண்டவாளத்தில் படுத்து திராவிடர் கழக பிரமுகர் தற்கொலை


ரெயில் தண்டவாளத்தில் படுத்து  திராவிடர் கழக பிரமுகர் தற்கொலை
x
திருச்சி

பொன்மலைப்பட்டி, ஆக.24-

திருவெறும்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுத்து திராவிடர் கழக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மனைவியிடம் வீடியோகாலில் பேசினார்.

திராவிடர் கழக பிரமுகர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் ஊராட்சி ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது 40). இவர் திராவிடர் கழக திருவெறும்பூர் நகர தலைவர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சுரேஷ் பெல் நிறுவன கணேசா பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்தார்.

மனைவியிடம் பேசினார்

இந்த நிலையில் இவர் கடன் பிரச்சினையால் அவதி அடைந்து வந்தார். நேற்று காலையில் சுரேஷ் மனைவிக்கு வீடியோ காலில் பேசினார். அப்போது, குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள், என்னை மன்னித்துவிடு என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் ஏதோ அசம்பாவித சம்பவம் நடைபெற உள்ளது என்பதை உணர்ந்த சுரேஷின் மனைவி உறவினர்களுக்கு கணவர் பேசிய விவரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் சுரேசை தேட தொடங்கினர்.

தண்டவாளத்தில் படுத்தார்

இதனிடையே திருவெறும்பூர் ெரயில் நிலையத்தில் நின்று இருந்த சுரேஷ் தனது பர்ஸ், செல்போன், கைகெடிகாரம், ஆதார் அட்டையை ரெயில்நிலையத்தில் உள்ள பெஞ்சில் வைத்துள்ளார். பின்னர் அவர் திருவெறும்பூர் அருகே குமரேசபுரத்திற்கு வந்தார்.

அப்போது, சரக்கு ரெயில் வேகமாக வந்தது. இதனையடுத்து சுரேஷ் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். இதனை பார்த்த சரக்கு ரெயிலின் என்ஜின் டிரைவர் தண்டவாளத்தில் படுத்து கிடந்த சுரேசை பார்த்து எழுந்திருக்குமாறு கத்திக்கொண்டே வந்தார். மேலும் ரெயிலை நிறுத்த முயன்றார்.

ஆனால் ரெயில் வேகமாக வந்ததால் நிற்காமல் சுரேஷ் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார். பின்னர் ரெயில் சிறிது தூரம் சென்று நின்றது. இது குறித்து சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் பொன்மலை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

சோகம்

மேலும் ரெயில்நிலையத்தில் இருந்த சுரேசின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்தது சுரேஷ் என்பதை உறுதி செய்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சினையில் சுரேஷ் தற்கொலை செய்து ெகாண்டது தெரியவந்தது. திருவெறும்பூர் நகர திராவிடர் கழக தலைவர் ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story