'திராவிட மாடல் அரசு எந்த மதத்தின் நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல' முதல்-அமைச்சர் பேச்சு
திராவிட மாடல் அரசு எந்த மதத்தின் நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல என்று சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தவத்திரு குன்றக்குடி பொன்னமல அடிகளார், பேராசிரியை பர்வீன் சுல்தானா, பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், அருட் சகோதரி அமலா, ஜெயின் சமூகத்தை சேர்ந்த ராஜேந்திர சோர்டியா ஆகிய அனைத்து மத பிரமுகர்கள் பங்கேற்றனர்.
திராவிட மாடல் அரசு
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:-
நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிறிஸ்துமஸ் விழாவை தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். இந்த விழா ஆண்டாண்டுதான் வர வேண்டுமா? அடிக்கடி வரக்கூடாதா? என்ற ஏக்கம் கூட எனக்கு வருவது உண்டு. அந்தளவுக்கு இந்த விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதை ஒரு மதத்தின் விழாவாக நாம் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து மதத்தினருக்கும் நல்லிணக்கமாக இருக்க கூடிய விழாவாக நடந்துக் கொண்டிருக்கிறது.
திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தின் நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்தி பிழைக்கலாம் என்று நினைக்கூடியவர்களுக்கு, மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்டி அதில் லாபம் பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிரான அரசுதான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
திராவிட கொள்கை
மனிதநேயத்தை வளர்ப்பதுதான் திராவிட கொள்கை ஆகும். பெரியாருடன் குன்றக்குடி அடிகளார் இணைந்து செயல்பட்டார். அண்ணா, கருணாநிதி, காயிதே மில்லத் ஆகியோருடன் இணைந்து நின்றார். அன்று முதல் இன்று வரை பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டவர்கள் எங்களோடு மேடையை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொருவரும் அவர்களுடைய கடவுளை வணங்குபவர்கள்தான். அடுத்தவர்களின் நம்பிக்கையை மதிப்பவர்கள்தான். ஆனால் அதே நேரத்தில் 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பது திருமூலரின் வாக்கு. அதைத்தான் தி.மு.க.வின் பார்வையாக அண்ணா முன்வைத்து சமத்துவ சமுதாயத்துக்கான சகோதரத்துவ உணர்வை வளர்த்து சமூக நீதி பாதையில் பயணிக்க செய்தார். தி.மு.க.வை பொறுத்தவரையில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற தத்துவத்தை எடுத்து வைத்த அண்ணாவின் வழியை பின்பற்றி இன்றைக்கு திராவிட மாடல் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சமய மார்க்கங்கள் சொன்னதை அரசியல் இயக்கமாக வழி நடத்தி வெற்றிக்கரமாக அதனை செயல்படுத்தி வரும் ஆட்சி தான் உங்கள் திராவிட மாடல் ஆட்சி. ஒரு துளி கண்ணீர் ஏழைகளிடம் இருந்து வெளிப்பட்டாலும் அதனை துடைக்க வேண்டிய கைகளாக திராவிட மாடல் அரசின் கைகள் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் ஆகும்.
சாதி, மதம், மொழியின் பெயரால் ஆதிக்கத்தை நிலை நாட்டி ஏழை மக்களை ஏமாற்றிட யார் நினைத்தாலும் அவர்களை அனுமதிக்காமல் எளிய மக்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு புகழாரம்
கல்வித்துறையில் கிறிஸ்தவ நிறுவனங்களின் பங்களிப்பை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. இனிய தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருக்க கூடிய நானும் கிறிஸ்தவ நிறுவனத்துடைய பள்ளியில்தான் படித்தேன். அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே போன்று மருத்துவ துறையில் கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆற்றி இருக்கிற தொண்டையும் நாம் மறக்க முடியாது.
மதத்தால் நாம் வெவ்வேறுவராக இருந்தாலும் மொழியால் நாம் எல்லோரும் தமிழர்கள். அந்த உணர்வோடு மத நல்லிணக்கத்தை முன்வைத்து ஒற்றுமையாக பயணிப்போம். கிறிஸ்துமஸ் திருநாள் சிறப்பாக அமையட்டும். அடுத்து வரக்கூடிய ஆங்கில புத்தாண்டும் ஒளிமயமாக திகழட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.