திராவிட இயக்க வரலாறு பயிற்சி பாசறை கூட்டம்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்- திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு


திராவிட இயக்க வரலாறு பயிற்சி பாசறை கூட்டம்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்- திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு
x

தூத்துக்குடியில் நடந்த திராவிட இயக்க வரலாறு பயிற்சி பாசறை கூட்டத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த திராவிட இயக்க வரலாறு பயிற்சி பாசறை கூட்டத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பயிற்சி பாசறை கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, விவசாய அணி, தொண்டர் அணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகளுக்கு திராவிட இயக்க பயிற்சி பாசறை கூட்டம் தூத்துக்குடி மறவன்மடம் அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெபராஜ் தலைமை தாங்கினார். தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் வீரபாகு முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் இன்பராஜ் லாரன்ஸ் வரவேற்றார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பயிற்சி பாசறையில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத்தலைவருமான திருச்சி சிவா எம்.பி. கலந்துகொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்து பயிற்சி நடத்தினார்.

தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

அப்போது அவர் பேசியதாவது:-

திராவிட இயக்க லட்சியம், நோக்கம் பற்றி ஆர்வத்துடன் அறிய காத்து கொண்டுள்ள தோழர்கள் நாளை இயக்கத்தை வழி நடத்தவேண்டியவர்கள். தி.மு.க. மட்டும் தான் அரசியல் வெற்றியை வென்றெடுப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் நீங்கள் சிப்பாய்களாக செல்லவேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் எல்லோருக்கும் எல்லா தகவல்களும் தெரிகிறது. எனவே நம்மை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். தமிழனை போல் வாழ்ந்தவன் இல்லை. நமது இனம் மற்றும் மொழி மீது படையெடுப்புகள் நடந்துள்ளது. மண் மீது மறைமுகமாக படையெடுப்பு நடந்துள்ளது. தமிழ் மட்டும் தான் சமஸ்கிருதத்தை மீறி வாழ்ந்து கொண்டிருக்கிறது. மாற்று கருத்துகள் இருக்கும் அவர்களை எதிர்கொள்ள நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி மற்றும் இனம் எது என்பதை தெரிந்தால் தான் நாம் நம்மை தயார்படுத்த முடியும். முக்கியமானவற்றை மற்றவர்களுக்கு எடுத்து செல்லுங்கள். சமுக நீதி, சனாதன தர்மம் காரணமாகத்தான் நம் முன்னோர்கள் படிக்க முடியாமல் இருந்தார்கள். இந்த சனாதன தர்மத்தை தான் தற்போது தமிழக ஆளுநர் தூக்கிப்பிடித்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க.வின் வளர்ச்சி

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தி.மு.க.வின் அடிப்படை பணி, தி.மு.க.வின் திட்டங்கள், வளர்ச்சி எதை நோக்கி செல்கிறது என்பதை இயக்கத்தினர், மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி பாசறை நடைபெறுகிறது. திராவிட கொள்கையின் அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் திராவிட கொள்கையினால் தங்கள் அடிப்படை உரிமையை பெற்றுள்ளார்கள். பா.ஜனதாவின் தில்லுமுல்லுவை உடைத்தெறிய வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story