"தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும்": சீமான்
“தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும்”:என்று நாம்தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
எழுச்சி மாநாடு
நாம் தமிழர் கட்சியின் 13-வது இன எழுச்சி மாநாடு நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விலக்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடுவதற்காக கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
பேட்டி
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது-
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. தற்போது இறப்பு நடந்ததால் வெளியே தெரியவந்து உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஏன் ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார்கள் என தெரியவில்லை. குடிக்காதவர்களின் வரிப்பணத்தை குடித்து இறந்தவர்களுக்கு கொடுத்து உள்ளார்கள். கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று உள்ளது. எந்த மீனவருக்காவது ரூ.10 லட்சம் கொடுத்து உள்ளார்களா?, நாட்டின் பாதுகாப்பு படையில் சேர்ந்து இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கும் நிவாரணம் கொடுக்கவில்லை.
அகற்ற வேண்டும்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோடநாடு வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிப்போம் என்றார்கள். இதுவரை எதுவும் நடக்கவில்லை.
ஆகவே தமிழகத்தில் இருந்து 2 திராவிட கட்சிகளையும் அகற்ற வேண்டும். எல்லா கொடுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஒரு மாற்று தேவைப்படுகிறது. பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுகிறார். இதில் அ.தி.மு.க. பற்றி எதுவும் வெளியிடவில்லை. இதனால் அவர் ஒரு சார்பாகத்தானே இருக்கிறார்.
திராவிட கட்சி, இந்திய கட்சிகளுக்கு ஊழல் பற்றி பேச அருகதை இல்லை. தேசிய கட்சிகள் மாநிலத்துக்கு வரும்போது, அவர்கள் மாநில கட்சியாக மாறிவிடுகின்றனர். அதன்பிறகு ஏன் தேசப்பற்று, இறையாண்மை பற்றி பேசுகிறீர்கள். அவர்களுக்கு மாற்றாக நாங்கள் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.