சேலத்தில் 8 இடங்களில் ஓடைகள் தூர்வாரும் பணி மேயர், ஆணையாளர் ஆய்வு


சேலத்தில்  8 இடங்களில் ஓடைகள் தூர்வாரும் பணி  மேயர், ஆணையாளர் ஆய்வு
x

சேலத்தில் 8 இடங்களில் ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம்

சேலம்,

வடகிழக்கு பருவமழையால் சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் 4 மண்டலங்களிலும் உள்ள அனைத்து ஓடைகள், மழைநீர் கால்வாய்கள் கடந்த மாதம் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மண்டலங்கள் வாரியாக விடுபட்ட ஓடை பகுதிகள் தூர்வார திட்டமிடப்பட்டு அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் உள்ள ஓடைகள், மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 37-வது வார்டில் ராமநாதபுரம் ஓடை, 9-வது வார்டில் கவுரி ஓடை, அஸ்தம்பட்டி மண்டலம் 17-வது வார்டில் அத்வைத ஆசிரம சாலை ஓடை தூர்வாரும் பணியை நேற்று மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், ஓடைகளில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதையடுத்து மழைகாலங்களில் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு கழிவு மண்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் எனவும், குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடைகளில் தண்ணீர் தேங்காமல் அதனை சுத்தப்படுத்தும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, தனசேகர், உதவி ஆணையாளர்கள் கதிரேசன், தியாகராஜன், செயற்பொறியளார் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் திருஞானம், தெய்வலிங்கம், ராஜேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், சுமதி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story