ரூ.19.44 கோடியில் தூர்வாரும் பணி தொடங்கியது
ரூ.19.44 கோடியில் தூர்வாரும் பணி தொடங்கியது என நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
ரூ.19.44 கோடியில் தூர்வாரும் பணி தொடங்கியது என நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீர்வளத்துறை சார்பில் 2023-24-ம் ஆண்டிற்கான தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமை தாங்கி, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருடன் நேரடியாகவும், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாகவும் தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நீர்வளத்துறை சார்பில் 2023-24-ம் ஆண்டிற்கு 182 வாய்க்கால் மற்றும் வடிகால் தேர்வு செய்யப்பட்டு, ரூ.19 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியானது அடுத்தமாதம் (மே) 31-ந் தேதிக்குள் முடிவடையும். தூர்வாரும் பணிகள் நடைபெறும் விவரங்களை சிறப்பு செயலியில் பதிவேற்றப்பட்டு பணிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.
சிறப்பு கண்காணிப்பு அலுவலர்
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர், செயற்பொறியாளர்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வார்கள். மாவட்டம்தோறும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் வடிகால் மற்றும் வாய்க்கால்களில் விரைவாகவும், சீராகவும் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் நல இயக்குனர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து பணிகளும் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.