பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தடுத்து நிறுத்தம்
சீர்காழியில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அப்போது விவசாயிகள், குடியிருப்புவாசிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழியில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அப்போது விவசாயிகள், குடியிருப்புவாசிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூர்வாரும் பணிகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, அகனி, ஆளஞ்சேரி, சீர்காழி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விளை நிலங்களில் சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.
இந்த வாய்க்காலில் மேல தேனூர் முதல் புதிய பஸ் நிலையம் வரை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
தடுத்து நிறுத்தம்
இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக புழுகாபேட்டை முதல் பொக்லின் எந்திரம் மூலம் விவசாயிகள் முன்னிலையில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலில் உள்ள மண்ணை அருகில் குடியிருப்புக்கு சொந்தமான இடத்தில் கொட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் குடியிருப்பு வாசிகள் தூர்வாரும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குடியிருப்பு வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசில் புகார்
இதனை தொடர்ந்து பட்டா இடத்தில் வாய்க்கால் மண்ணை கொட்டக்கூடாது, வாய்க்கால் ஓரம் உள்ள மதில் சுவரை சேதப்படுத்தக்கூடாது எனக்கூறி குடியிருப்பு வாசிகள் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் அடிப்படையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் உதவி கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். அதுவரை தூர்வாரும் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு இன்ஸ்பெக்டர் கேட்டுக் கொண்டார். இதனால் காவல் நிலையத்தில் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரையும் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
கலெக்டரிடம் கோரிக்கை
இதனிடையே சீர்காழி வந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதியை விவசாய சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கழுமலையாறு பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உதவியோடு முறைப்படி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார்.