கட்டையால் தாக்கி தையல் தொழிலாளி படுகொலை
கட்டையால் தாக்கி தையல் தொழிலாளி படுகொலை
திருப்பூர்
திருப்பூரில் சொத்து தகராறில் பனியன் நிறுவன தையல் தொழிலாளியை மரக்கட்டையால் அடித்துக்கொலை செய்த தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பனியன் நிறுவன டெய்லர்
திருப்பூர் காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவர்களுடைய மகன் நாகராஜ் (வயது 40), கார்த்திக் (30). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. இருவரும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தனர். சொந்த வீட்டில் அண்ணன்-தம்பி இருவரும் மட்டும் வசித்து வந்தார்கள். இருவரும் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் நாகராஜ், தனது வீட்டுக்கு முன் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். கார்த்திக்கை காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அடித்துக்கொலை
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில் மதுபோதையில் அண்ணன்-தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நாகராஜ் பெயரில் உள்ள 2 சென்ட் அளவுள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதிக்கொடுக்குமாறு கார்த்திக் தனது அண்ணனிடம் தொந்தரவு செய்துள்ளார். அதற்கு நாகராஜ் மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு அதிகமாகியுள்ளது. இதனால் கோபமடைந்த கார்த்திக் மரக்கட்டையால் நாகராஜை சரமாரியாக தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டார். தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறி நாகராஜ் இறந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை போலீசார் தேடி வருகிறார்கள். சொத்து தகராறில் அண்ணனை கட்டையால் தம்பி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.