படகு துறையில் தூர்வாரும் பணி தொடங்கியது


படகு துறையில் தூர்வாரும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பூம்புகார் படகு துறையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பூம்புகார் படகு துறையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சுற்றுலா தலம்

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் படகு போக்குவரத்தை இயக்கி வருகிறது.

இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச பயணம் செய்வதற்காக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதி நவீன சொகுசு படகுகளும் உள்ளன.

தூர்வாரும் பணி

இந்த 5 படகுகளும் படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கடல் நீர் மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும் போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. இதற்கு காரணம் படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததே என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அதன் பயனாக 5 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு துறையில் தூர்வாரும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

படகு போக்குவரத்து

படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலில் இருந்து தூர்வாரப்படும் மணல் கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்த தூர்வாரும் பணியால் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படவில்லை. படகு துறையில் தூர்வாரும் பணி நடைபெறாத பகுதியில் இருந்து படகு போக்குவரத்து இயக்கப்பட்டது.


Next Story