தூர்வாரும் பணி 20-ந் தேதிக்குள் தொடங்கப்படும்


தூர்வாரும் பணி 20-ந் தேதிக்குள் தொடங்கப்படும்
x

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி வருகிற 20-ந் தேதிக்குள் தொடங்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி வருகிற 20-ந் தேதிக்குள் தொடங்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் மோகன்ராஜ், குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளான குரும்பனை பெர்லின், அருட்பணியாளர் சர்ச்சில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன், பஞ்சாயத்து தலைவர்கள் அந்தோணி (பள்ளம்), கெபின்ஷா (கேசவன்புத்தன்துறை), லைலா (தூத்தூர்) மற்றும் அலெக்சாண்டர், ஜான் அலோசியஸ், மரிய ரூபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகள் வருமாறு:-

அரிய வகை மணல் ஆலை

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும். தாமிரபரணி ஆறு சேரும் இடமாக இந்த துறைமுகம் இருப்பதால் அங்கு நிரந்தரமாக மணல் அள்ளும் எந்திரத்தை நிறுத்தி வைக்க வேண்டும். மீன்வளத்துறை அலுவலகங்களை மண்டல வாரியாக பிரிக்க வேண்டும். தூத்தூர் மண்டலத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை விரைவாக அமைக்க வேண்டும். மீன்பிடி படகு ஆய்வினை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். மீன்பிடித் தடைகாலத்தில் மீன்பிடி படகு ஆய்வை நடத்த வேண்டும். ஏ.வி.எம். கால்வாயை சீரமைக்க வேண்டும். இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். இனயம்புத்தன்துறை பஞ்சாயத்தில் உள்ள தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும்.

மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய வகை மணல் ஆலை மூலம் 1,144 எக்டேர் பரப்பில் மணல் எடுப்பது தொடர்பாக மக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி கடந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

பஸ் வசதி

தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இரையுமன்துறையில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியை சீரமைத்து தர வேண்டும். போக்குவரத்துத்துறை மூலம் கடற்கரை கிராமங்களுக்கு முறையான பஸ் வசதி மற்றும் மின் மாற்றிகள் அமைத்துத் தர வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில் கூறியதாவது:-

20-ந் தேதிக்குள் பணி...

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணியினை இம்மாதம் 20-ந் தேதிக்குள் தொடங்கி மூன்று வார காலத்திற்குள் முடிக்கப்படும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மண்டல வாரியாக பிரிக்கவும், தூத்தூர் மண்டலத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் அமைக்கவும் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி படகு ஆய்வினை வருடாந்திர முறையில் மீன்பிடி தடைகாலத்தில் நடத்திட நடவடிக்கையில் உள்ளது. ஏ.வி.எம். கால்வாயினை விரைவாக தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரையுமன்துறை மீனவ கிராமத்தில் தடுப்புச்சுவர் அமைத்திட ரூ.15 கோடிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இனயம்புத்தன்துறை ஊராட்சியில் உள்ள தெருவிளக்குகளை சமபந்தப்பட்ட பஞ்சாயத்து மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட ரூ.40 கோடிக்கு திருத்திய கருத்துரு அனுப்பப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

மணல் எடுப்பது தொடர்பாக மக்களின் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். மற்ற கோரிக்கைகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


Next Story