4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள்; சுதந்திர தினத்தன்று அமல்படுத்த திட்டம்
திருப்பூர் மாநகர மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் சுதந்திர தினத்தன்று அமல்படுத்தப்பட உள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.
4-வது குடிநீர் திட்டம்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 12 லட்சம் பேர் வசிக்கிறார்கள். மாநகராட்சி மக்களுக்கு முதல், 2-வது, 3-வது குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதல் மற்றும் 2-வது குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு அதிகப்படியான ஆண்டுகள் ஆகிவிட்டதால் அந்த திட்டத்துக்கான பிரதான குழாய்கள் வலுவிழந்து விட்டது. இதனால் மெல்ல, மெல்ல அந்த திட்டத்தில் இருந்து தண்ணீர் பெறும் அளவு குறைக்கப்பட்டு விட்டது. தற்போது மாநகரம் முழுவதும் 3-வது திட்ட குடிநீரை நம்பியே உள்ளது. தினசரி 120 எம்.எல்.டி. அளவுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எதிர்கால மக்கள் பெருக்கத்தின் அடிப்படையில் 4-வது குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு 10 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தொகை இருந்ததாக கணக்கிடப்பட்டது. 2035-ம் ஆண்டு 14 லட்சத்து 80 ஆயிரம் பேரும், 2050-ம் ஆண்டு 19½ லட்சம் மக்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அம்ரூத் திட்டத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.1,120 கோடியே 57 லட்சத்தில் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டது.
196 எம்.எல்.டி. அளவு தண்ணீர்
மேட்டுப்பாளையம் அருகே இதற்காக திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தொழில்துறையினர் பங்களிப்புடன் நிலத்தை சொந்தமாக வாங்கி அங்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அங்கிருந்து குழாய் மூலமாக திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது. ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள பகுதியில் இருந்து 19½ கிலோ மீட்டர் தூரத்தில் தலைமை சுத்திகரிப்பு நிலையம் வரை பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 196 எம்.எல்.டி. தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பின்னர் மாநகருக்கு கொண்டு வரப்படுகிறது.
4-வது குடிநீர் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினமும் மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 3-வது வாரத்தில் இருந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேயர் ஆய்வு
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் 4-வது குடிநீர் திட்டப்பணிகளை மேட்டுப்பாளையம் அருகே கூட்டாய்வு செய்தனர். நீரேற்று நிலைய பணிகளை ஆய்வு செய்தனர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
குறுக்கிளிபாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலைய பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் அவினாசி தேசிய நெடுஞ்சாலை கருணைபாளையம் பிரிவில் இருந்து பிரதான குழாய் பதிக்கும் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
சுதந்திர தினத்தன்று அமல்படுத்த திட்டம்
இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் கூறும்போது, '4-வது குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலையை கடந்து பிரதான குழாய் பதிக்கும் பணியில் சிரமங்கள் ஏற்பட்டது. இதற்கு உரிய அனுமதி பெற்று அந்த பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி, சுதந்திர தினத்தன்று 4-வது குடிநீர் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 70 மேல்நிலைத்தொட்டிகளில் குடிநீரேற்றப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் 196 எம்.எல்.டி. தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். முதல்கட்டமாக 50 எம்.எல்.டி. அளவு தண்ணீரை வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.