வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
x

வல்லம் அருகே வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

தஞ்சாவூர்

வல்லம்;

வல்லம் அருகே வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

தஞ்சை அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம் நிலுவையின்றி செலுத்த கோரி ஆட்டோ மூலம் பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் குடிநீர் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணி வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகியின் உத்தரவின் பேரில் நேற்று முதல் தொடங்கியது. இதில் வல்லம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி, வரி தண்டலர் ஹேமசந்திரன், துப்பரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், பம்ப் மெக்கானிக் பிரதிஷ் மற்றும் பணியாளர்கள் வல்லத்தில் உள்ள தெருக்களில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்புகளை துண்டித்தனர்.

நிலுவையின்றி செலுத்த வேண்டும்

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி கூறியதாவது:- சொத்து வரி, குடிநீர் வரி, வணிக வளாகம், குடியிருப்புகளுக்கான சொத்து மற்றும் குடிநீர் வரியை பல ஆண்டுகளாக செலுத்தாமல் ஒரு சிலர் உள்ளனர். வல்லம் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலமாக பொது மக்களிடம் வரி செலுத்துவது தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டது. குடிநீர், சொத்து வரி கட்டணத்தை நிலுவையின்றி செலுத்த கோரி ஆட்டோ மூலம் ஒலிப்பெருக்கி மூலமாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.இருப்பினும் பலர் தற்போது வரை குடிநீர் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். லட்சக்ணக்கில் குடிநீர் கட்டணம் பேரூராட்சிக்கு வர வேண்டி உள்ளது. எனவே குடிநீர் வரி செலுத்தாத வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளை பணியாளர்கள் மூலமாக துண்டித்து வருகிறோம். எனவே பொதுமக்கள் விரைவில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தினை நிலுவையின்றி செலுத்தி பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினாா்.


Next Story