அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்


அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
x

மேல்விஷாரத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு ண்டிக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

மேல்விஷாரத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு ண்டிக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.

நகராட்சி கூட்டம்

மேல்விஷாரம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ். டி.முகமது அமீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் குல்சார் அஹமத், பொறியாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டு பிரச்சினைகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

இம்தியாஸ் அஹமத்: கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட பணிகள் சரிவர நடைபெறவில்லை. எனவே நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யாமல், பணம் வழங்க கூடாது.

ஜியாவுதீன்: கடந்த மூன்று கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டால் தானே மக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

காதர் பாஷா: எனது வார்டில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு பட்டா வழங்கி, வரி போட வேண்டும்.

தலைவர்: அரசு விதிமுறைப்படி தான் பட்டா வழங்கப்படும்.

அ.தி.மு.க. என்பதால் புறக்கணிப்பா?

ஜமுனா ராணி: எனது வார்டில் மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவு நீர் வீட்டிற்குள் செல்கிறது. இது குறித்து நகர மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தும் வந்து பார்க்கவில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் என்பதால் வந்து பார்க்கவில்லையா?.

லட்சுமி: குடி நீர் பிரச்சினை, தெருவிளக்கு சரியாக எரிவதில்லை, நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உங்களால் (கவுன்சிலர்கள்) முடியவில்லை என்றால் நாங்களே நகராட்சிக்கு சென்று முறையிடுகிறோம் என்று பொதுமக்கள் சொல்கின்றனர்.

உஷாராணி: ரேஷன் கடைக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். தெருவில் மின் கம்பம் உள்ளது. ஆனால் விளக்கு இல்லை. பெரும்பாலான தெருக்களில் கழிவுநீர் கால்வாய் இல்லை. கழிவுநீர்கால்வாய் அமைத்து தர வேண்டும்.

உதயகுமார்: எனது வார்டில் பெரும்பாலான மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது. புதிய கம்பங்கள் அமைக்க வேண்டும்.

கோபிநாத்: பழைய நகராட்சி அலுவலகத்தில் பழுதான பேட்டரி வாகனங்கள் உள்ளன. அதனை பழுது பார்த்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

துண்டிக்கப்படும்

தலைவர் எஸ்.டி.முகமது அமீன் பேசுகையில் திருட்டு சம்பவங்கள், விபத்துக்களை தடுக்க நமக்கு நாமே திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் குழாய் இணைப்பு அமைத்துள்ளனர். அவர்களாக முன்வந்து அதற்குண்டான பணத்தைக் கட்டி ரசீது பெற வேண்டும். இல்லை என்றால் குழாய் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story