ரகுமத்நகர் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்-மேயரிடம் பொதுமக்கள் மனு
பாளையங்கோட்டை ரகுமத்நகர் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.
பாளையங்கோட்டை ரகுமத்நகர் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்ஷா, மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பாளையங்கோட்டை ரகுமத்நகர் பகுதி மக்கள் கவுன்சிலர் ஜெகநாதன் தலைமையில் வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "ரகுமத்நகர் 80 அடி சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லாமல் உள்ளது. 15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு விரைந்து வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு ஆனையர்குளத்தை சீரமைத்து தரவேண்டும் என்று கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் மனு கொடுத்தார்.
நெல்லை டவுன் 18-வது வார்டுக்கு உட்பட்ட வாகைகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊர் நுழைவு வாயில் பயணிகள் நிழற்குடை அருகில் இ்மானுவேல் சேகரன் படத்தை வைத்து நிகழ்ச்சி நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என்று ஊர் மக்கள் கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்தனர்.
நெல்லை மாநகராட்சி 22-வது வார்டில் உள்ள ஆண்டாள்புரம், மலையாளமேடு பகுதியில் பாதாள சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் மனு கொடுத்தனர்.
அடிப்படை வசதி
மேலப்பாளையம் பகுதிக்கு தேவையான சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேலப்பாளையம் பகுதியில் சாலையில் சுற்றித் திரிகின்ற மாடுகளை பிடிக்க வேண்டும். அந்த மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு கொடுத்தனர்.