தஞ்சையில் ஆறு போல் சாக்கடையில் வழிந்தோடும் குடிநீர்


தஞ்சையில் ஆறு போல் சாக்கடையில் வழிந்தோடும் குடிநீர்
x

தஞ்சையில் ஆறு போல் சாக்கடையில் வழிந்தோடும் குடிநீர்

தஞ்சாவூர்

தஞ்சையில் ஆறு போல் சாக்கடையில் குடிநீர் வழிந்தோடுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

கொள்ளிடம் குடிநீர்

தஞ்சை மாநகர மக்களுக்கு அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கொள்ளிடத்தில் ஆழ்குழாய் நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் நீர் எடுத்து வரப்படுகிறது.

இதற்காக ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு, குளோரினேசன் கலந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 2 நீர் உறிஞ்சும் கிணறு

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலும் 2 ஆழ்குழாய் நீர் உறிஞ்சு கிணறு கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்று பயன்பாட்டுக்கு வந்து விட்டது. மற்றொரு பணியும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதுவும் பயன்பாட்டுக்கு வந்து விட்டால் தஞ்சை நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலை உருவாகும்.

தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் செல்லும் குழாய்கள் உள்ள பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் சரி செய்யும் வகையில் ஆங்காங்கே கேட்வால்வும் அமைக்கப்பட்டுள்ளது.

வீணாகும் குடிநீர்

அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கேட்வால்வு தஞ்சை அண்ணா சிலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலையிலும் உள்ளது. இந்த கேட்வால்வு உள்ள பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அருகில் உள்ள சாக்கடை நீருடன் கலந்து செல்கிறது. அதுவும் குடிநீர் ஆறுபோல்சென்று சாக்கடையில் கலக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிலை நீடித்து வருகிறது.

தண்ணீர் வராத நேரங்களில் ஏற்கனவே அதில் தேங்கியுள்ள தண்ணீருடன், மண்ணும் சேர்ந்து குடிநீர் குழாய்களுக்குள் சென்று விடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் வெளியேறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Next Story