ஜல்ஜீவன் திட்டத்தில் 80 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் 80 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. அதில் தினமும் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜல்ஜீவன் மிஷன்
உலகில் ஒவ்வொரு உயிரும், உயிர் வாழ தண்ணீர் அவசியம். அதனால் தான் ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் கூறுகின்றன. மேலும் நாட்டில் வாழும் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. இந்த குடிநீரை பிடிக்க தெருவில் இருக்கும் பொது குழாய்களிலும், லாரிகளில் கொண்டு வரப்படும் குடிநீரையும் பிடிக்க பெண்கள் மல்லுகட்டும் சம்பவங்களை யாரும் மறந்து விடமுடியாது.
பெண்களின் அன்றாட பணிகளில், குடிநீர் பிடிப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. அதிலும் கிராமங்களில் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. இந்த நிலையை தவிர்க்க ஜல் ஜீவன் மிஷன் எனும் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதே நோக்கமாகும்.
55 லிட்டர் குடிநீர்
மேலும் ஒவ்வொரு நபருக்கும் தினமும் 55 லிட்டர் குடிநீர் வழங்குவது ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். இதை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 24 லட்சத்து 93 ஆயிரம் வீடுகளில், 69 லட்சத்து 14 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
மேலும் மீதமுள்ள வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து இருக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குக்கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தெருவில் பொதுக்குழாய்களில் வரிசையில் நின்று குடிநீர் பிடித்த பெண்கள், வீட்டிலேயே குடிநீர் பிடித்து வருகின்றனர்.
ஆதாரங்களை பெருக்க...
அந்த வகையில் பெண்கள் தங்களுடைய அன்றாட வேலைப்பழு குறைந்து இருப்பதாக கூறுகின்றனர். அதேநேரம் பல பகுதிகளில் தினமும் குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதனால் குடிநீர் பிடித்து சேமித்து வைக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே காவிரி கூட்டு குடிநீர், வைகை கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி புதிய குடிநீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும்.
அதன்மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பது கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வாங்கியவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தினமும் வினியோகம்
மஞ்சுளா (கரிக்காலி, காமராஜர்நகர்) :- வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கியது மிகவும் பயனுள்ள திட்டம் ஆகும். பொதுக்குழாயில் காத்திருக்காமல் வீட்டுக்கு உள்ளே குடிநீர் பிடித்து கொள்ள முடிகிறது. தினமும் காலை ஒரு மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மிகவும் குறைந்த அளவே குடிநீர் வருகிறது. இதனால் வீட்டுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே போதிய அளவு குடிநீர் வழங்க வேண்டும்.
நிர்மலாதேவி (கம்பிளியம்பட்டி) :- ஜல் ஜீவன் திட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தார்கள். வீட்டுக்கு உள்ளேயே குடிநீர் பிடிப்பதால் பயனுள்ளதாக இருக்கிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் 1½ மணி நேரம் குடிநீர் வருகிறது. அது போதுமானதாக இருக்கிறது. எனினும் தினமும் குடிநீர் வழங்கினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.