15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்
விருதுநகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் நகர் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகின்றனர்.
விருதுநகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் நகர் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகின்றனர்.
குடிநீர் வினியோகம்
விருதுநகர் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆனைக்குட்டம் அணைப்பகுதி உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்களில் இருந்து நகா்மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
நகர்மக்களிடம் இருந்து மாதாந்திர குடிநீர் கட்டணம் வசூலித்து வரும் நகராட்சி நிர்வாகம் நீர் ஆதாரங்களில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் கிடைத்து வருவதால் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய திணறும்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 15 தினங்களுக்கு ஒரு முறை நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென மக்கள் புகார் கூறுகின்றனர்.
நிரந்தர பிரச்சினை
இதனால் நகர் முழுவதும் பொதுமக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக கோடை காலத்தில் தான் குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும் நிலையில் தற்போது விருதுநகரில் குடிநீர் பிரச்சினை என்பது நிரந்தரமாகிவிட்டது.
எனவே நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குடிநீர்பிரச்சினையை சமாளிக்க அரசிடமிருந்து நிதி உதவி பெற்று லாரிகள் மூலம் நகர்மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
மாற்று ஏற்பாடு
தற்போதைய நிலையில் நீர் ஆதாரங்களில் இருந்து கூடுதல் குடிநீர் கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் நகராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம்.
மேலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து கூடுதல் குடிநீர் கிடைப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.