35 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்


35 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்
x

ரோசல்பட்டி பஞ்சாயத்தில் 35 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


ரோசல்பட்டி பஞ்சாயத்தில் 35 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரோசல்பட்டி பஞ்சாயத்து

விருதுநகர் யூனியன் ரோசல்பட்டி பஞ்சாயத்து விருதுநகர் நகராட்சி பகுதியையொட்டி உள்ளது. இந்த பஞ்சாயத்து பகுதியில் குடியிருப்புகளுக்கு ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் மூலமும், குடிநீர் வடிகால் வாரியத்தினர் மத்திய சேனையில் இருந்தும், ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து வழங்கும் குடிநீரின் மூலமும் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

ஜல்ஜீவன் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பஞ்சாயத்தில் குடியிருப்போர் 35 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளதாகவும், இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு

இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தால் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறதே தவிர பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்று மக்கள் தெரிவிக்கும் நிலை உள்ளது.

இதுபற்றி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டபோது ராஜீவ் காந்தி குடிநீர் திட்டத்தின் மூலம் திறந்த வெளி கிணறுகளில் இருந்து தினசரி 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதாகவும், குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஆனைகுட்டம் அணை பகுதியில் இருந்து தினசரி 11 லட்சம் லிட்டர் தர வேண்டிய நிலையில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தரக்கூடிய நிலை உள்ளதாகவும், இதனால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுவதாவும் தெரிவிக்கப்பட்டது.

நடவடிக்கை

இதுபற்றி குடிநீர் வடிகால் வாரியத்திடம் கேட்டால் திட்டத்தினை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் நிலை உள்ளதே தவிர பிரச்சினைக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரியம் தயாராக இல்லை. ஜல்ஜீவன் திட்டப்பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் கலந்தாய்வு செய்து ரோசல்பட்டி கிராம மக்களுக்கு உரிய முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story