அதிவேகத்தை தவிர்த்து நிதானமாக பள்ளி வாகனத்தை இயக்க வேண்டும்
எந்தவித விபத்தும் ஏற்படாத வகையில் அதிவேகத்தை தவிர்த்து நிதானமாக பள்ளி வாகனத்தை இயக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்
விழுப்புரம்
பள்ளி வாகனங்கள் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறையின் மூலம் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்திற்கு கொண்டு வந்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த வாகனங்களை கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணியை தொடங்கி வைத்தனர். அப்போது வாகனத்தின் முன்புறமும், பின்புறமும் பள்ளி வாகனம் என எழுதப்பட்டு, மாணவ- மாணவிகள் படத்துடன் கூடிய லோகோ ஒட்டப்பட்டுள்ளதா, உரிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு கலெக்டர் மோகன் கூறியதாவது:-
விதியை மீறினால் பறிமுதல்
அரசு உத்தரவின்படி மாவட்டத்தில் 60 பள்ளிகளை சேர்ந்த 187 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் 147 வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்து வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வாகனங்களில் பழுதை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டும் வாகனத்தை கொண்டு அனுமதி பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் ஓரிரு நாளில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
பள்ளி வாகனங்களை பொறுத்தவரை வட்டார போக்குவரத்து துறையின் அனுமதிபெறாத வாகனங்கள் பயன்படுத்துவது கண்டறிந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் வாகன ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும். டிரைவர்கள், நடத்துனர்கள் மாணவ- மாணவிகளை அழைத்துச் செல்லும்போது 2 பக்க கதவுகளும் சரியாக அடைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். அதுபோல் வாகனத்தில் உள்ள தீ தடுப்பு கருவிகள் சரியாக இயங்குகிறதா? என்று அவ்வப்போது பரிசோதித்து உறுதி செய்வதோடு முதலுதவி பெட்டியில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
டிரைவர்களுக்கு அறிவுரை
பள்ளி வாகன டிரைவர்கள், வாகனத்தை இயக்கும்போது எக்காரணத்தை கொண்டும் அடுத்த வாகனத்தை முந்திச்செல்ல வேண்டும் என்ற நிலையில் வாகனத்தை இயக்கக்கூடாது. அதிவேகத்தை தவிர்த்து நிதானமாக வாகனத்தை இயக்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கக்கூடாது. பள்ளியில் இருந்து குழந்தைகள் வீட்டுக்கு செல்லும்போது சாலையை கடந்து குழந்தைகள் செல்லும் நிலை இருந்தால் பள்ளி வாகனத்தை நிறுத்தி குழந்தைகள் பாதுகாப்பாக சாலையை கடந்து சென்ற பின்னரே பள்ளி வாகனத்தை அங்கிருந்து இயக்குதல் வேண்டும். பின்பக்கமாக வாகனத்தை இயக்கும்போது நடத்துனர் உதவியுடன் வாகனத்தின் பின்புறம் குழந்தைகள் யாரேனும் இருக்கிறார்களா என்பதை பார்த்து பாதுகாப்பாக திருப்பி எடுத்துச்செல்ல வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பு
பள்ளி நிர்வாகத்தினர், வாகனங்களை அவ்வப்போது ஆய்வு செய்து முறையாக பராமரிப்பதுடன் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி வாகனத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர்கள் எந்தளவிற்கு நம்பிக்கையுடன் உங்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்களோ, அந்தளவிற்கு நம்பிக்கையுடன் பிள்ளைகளை நன்றாக பாதுகாப்புடன் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அத்தகைய பொறுப்புள்ள பணியே ஓட்டுனர் பணியாகும். மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் எந்த விபத்தும் விழுப்புரம் மாவட்டத்தில் இல்லை என்ற நிலையில் டிரைவர்களின் பணி சிறப்பாக அமைந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், தாசில்தார் ஆனந்தகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் கங்காதரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.