வழித்தடத்தை மாற்றி தன்னிச்சையாக அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்-கண்டக்டர் பணியிடை நீக்கம்
வழித்தடத்தை மாற்றி தன்னிச்சையாக அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்-கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
வழித்தடத்தை மாற்றி தன்னிச்சையாக அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்-கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
பணியிடை நீக்கம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருபவர் கருப்பணன். கண்டக்டராக பணியாற்றுபவர் தமிழ்ச்செல்வன். இதில் கருப்பணன், அம்பேத்கர் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மத்திய சங்க தலைவராக உள்ளார். தமிழ்ச்செல்வன் அதே சங்கத்தில் மாநில துணைச்செயலாளராக இருக்கிறார். இவர்கள் 2 பேரும் ஒரே பஸ்சில் பணியாற்றி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 18-2-2023 அன்று கருப்பணனும், தமிழ்ச்செல்வனும் பெரியகுளம்-மதுரை வழித்தடத்தில் பஸ்சை ஓட்டிச்சென்றனர். பின்னர் அவர்கள் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்ல வேண்டும் என்று போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் மதுரை-திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து மதுரை-பழனி வழித்தடத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பெரியகுளம் பணிமனை கிளை மேலாளர் மாரிமுத்து விசாரணை நடத்தி துறைரீதியிலான நடவடிக்கை எடுத்தார். அதன்படி, அவர்கள் 2 பேரையும், நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தர்ணா போராட்டம்
இதற்கிடையே நேற்று பணிக்கு வந்த கருப்பணன், தமிழ்ச்செல்வன் தாங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து அறிந்தனர். இதனால் 2 பேரும், பணியிடை நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியகுளம் போக்குவரத்துக்கழக பணிமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தங்களை மேலாளர் சிறைபிடித்து வைத்துக்கொண்டதுடன், கிளை அலுவலகத்தில் இருந்து 2 நாட்கள் வெளியே செல்லக்கூடாது என்று கூறி அடையாள அட்டை வாங்கிக்கொண்டதாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் சங்கத்தை சேர்ந்தவர்கள் கருப்பணன், தமிழ்ச்செல்வன் பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி பணிமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதேபோல் கருப்பணன், தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பணிமனை மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளரிடம் இதுதொடர்பாக பேசிக்கொள்வதாக கூறிவிட்டு, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பரபரப்பு
இதுகுறித்து பெரியகுளம் பணிமனை கிளை மேலாளர் மாரிமுத்துவிடம் கேட்டபோது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரும் உரிய வழித்தடத்தில் பஸ்சை இயக்காமல் தன்னிச்சையாக வேறொரு வழித்தடத்தில் இயக்கி உள்ளனர். அதனால் அவர்கள் 2 பேரும் 2 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்களை 2 நாட்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வந்து பணியில் சேர்ந்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் பணிமனையில் தர்ணாவில் ஈடுபட்டனர் என்றார்.
இந்த சம்பவத்தால் பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பரபரப்பு ஏற்பட்டது.