லாரி டயர்களை திருடிய டிரைவர் கைது

லாரி டயர்களை திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தாமரைக்குளம்:
மதுரை மேலூரை சேர்ந்தவர் காஞ்சிவனம் (வயது 48). டிரைவரான இவர் தனியார் டிரான்ஸ்போர்ட்டின் திருச்சி கிளையில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அந்த டிரான்ஸ்போர்ட்டுக்கு சொந்தமான பல்கர் லாரியை ஓட்டி வந்தார். கடந்த 8-ந்தேதி கும்பகோணத்தில் சரக்கை இறக்கிவிட்டு லாரியை அரியலூரில் உள்ள தனியார் சிமெண்டு தொழிற்சாலைக்கு எடுத்து செல்வதாக டிரான்ஸ்போர்ட்டு கிளைக்கு தகவல் கூறிய காஞ்சிவனம், சிறிது நேரத்தில் லாரியின் ஜி.பி.எஸ். சிக்னலை துண்டித்துள்ளார். இதையடுத்து அவரை டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. மேலும் லாரியை சிமெண்டு தொழிற்சாலை அருகே நிறுத்தி விட்டு காஞ்சிவனம் தலைமறைவானார். இதனால் சந்தேகமடைந்த டிரான்ஸ்போர்ட்டு ஊழியர்கள் நேரில் வந்து பார்த்த போது பல்கர் லாரியின் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான டயர்கள் மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அந்த டிரான்ஸ்போர்ட்டின் திருச்சி கிளை மேலாளர் பாலமுருகன் அரியலூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் மதுரை மேலூருக்கு சென்றனர். அங்கு தலைமறைவாகியிருந்த காஞ்சிவனத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 8 லாரி டயர்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து காஞ்சிவனத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.