ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் டிரைவர் சிக்கினார்
தூத்துக்குடி தொழில் அதிபர் காரில் இருந்து ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கார் டிரைவர் சிக்கினார். மேலும் 2 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது
தூத்துக்குடி தொழில் அதிபர் காரில் இருந்து ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கார் டிரைவர் சிக்கினார். மேலும் 2 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரூ.25 லட்சம் கொள்ளை
தூத்துக்குடி சண்முகபுரம் புதுக்கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). இவர் அரிசி, வெங்காயம் உள்ளிட்டவைகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். கடந்த 19-ந்தேதி சரவணகுமார் தனது நண்பரான தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த செல்வராஜூடன் தனது காரில் நாகர்கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கு லிங்கராஜ் என்பவரிடம் ரூ.25 லட்சம் வாங்கி கொண்டு தூத்துக்குடிக்கு புறப்பட்டனர். காரை தூத்துக்குடி தபால்தந்தி காலனி பகுதியை சேர்ந்த செல்வசரவண கண்ணன் (25) என்பவர் ஓட்டிவந்தார்.
கார் நெல்லை கே.டி.சி. நகரில் வந்த போது சாலையோரத்தில் உள்ள ஒரு ஓட்டல் அருகே காரை நிறுத்தி சாப்பாடு வாங்க சென்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த மர்மநபர் காரின் கதவை திறந்து அதில் இருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டார்.
டிரைவர் சிக்கினார்
இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்தார். துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், தொழில் அதிபர் சரவணகுமார், அவரின் நண்பர் செல்வராஜ், கார் டிரைவர் செல்வ சரவணகண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது டிரைவர் செல்போனில் தகவல்கள் அழிக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், கார் டிரைவரை தனியே அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது ரூ.25 லட்சம் கொள்ளை போன சம்பவத்தில் கார் டிரைவருக்கு சம்பந்தம் இருப்பது தெரியவந்தது.
தனிப்படை
செல்வசரவணகண்ணன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் சரவணகுமாரிடம் கார் டிரைவராக வேலைக்கு சோ்ந்துள்ளார். அதற்கு முன்பு பெயிண்டராக வேலைபார்த்த அவர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்றுவந்துள்ளார். அவ்வாறு நாகர்கோவில் சென்ற போது ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் சீக்கிரத்தில் பணக்காரராக ஆக வேண்டிய ஆசையில் கொள்ளை அடிப்பது குறித்து செல்வ சரவணகண்ணனிடம் பேசிக்கொண்டு இருப்பாராம்.
இதனால் தான் வேலைக்கு சேர்ந்த பின்னர் அவரிடம் தொடர்பு கொண்ட செல்வசரவணகண்ணன், ரூ.25 லட்சத்துடன் காரில் வருவதை செல்போனில் தொடர்புகொண்டு தெரிவித்து உள்ளார். அதன்படி அந்த நபர் தனது கூட்டாளியான மற்றொரு நபருடன் வந்து காரில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பணத்துடன் தப்பிச்சென்ற 2 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து போலீசார், கார் டிரைவர் செல்வ சரவணகண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.