அரசு பஸ்சில் பெண்ணை ஏற்றாத டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்
அரசு பஸ்சில் பெண்ணை ஏற்றாத டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கரூர்,
ரேஷன் பொருட்கள் வாங்கினர்
கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டி பகுதியை சேர்ந்த சில பெண்கள், 3 வயது பெண் குழந்தையுடன் அங்கிருந்து அரசு பஸ்சில் ஏறி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆச்சிமங்கலம் கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடைக்கு சென்றனர்.அங்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல ஆச்சிமங்கலம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.
பெண்ணை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்
அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து ஆலமரத்துப்பட்டி செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் பெண்கள் ரேஷன் பொருட்களுடன் ஏறினர். அப்போது 3 வயது குழந்தையின் தாயார் தனது மகளை பஸ்சில் ஏற்றிவிட்டு ரேஷன் பொருட்கள் அடங்கிய மூட்டையை எடுக்க சென்றார். அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.இதற்கிடையே 3 வயது குழந்தை தனது தாயை காணாமல் அழத் தொடங்கினாள். சுமார் 2 கிலோ மீட்டர் பயணம் செய்த பிறகு கோடங்கிப்பட்டியில் பெண்கள், 3 வயது குழந்தையுடன் பஸ்சில் இருந்து இறக்கினர். பின்னர் பஸ் அங்கிருந்து சென்றது.
வாக்குவாதம்
இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் ஆச்சிமங்கலத்தில் இருந்து மற்றொரு பஸ்சில் ஏறி கோடங்கிப்பட்டிக்கு வந்து இறங்கினார். அப்போது குழந்தையின் தாயார் பஸ்சில் ஏற்றப்படாத சம்பவம் பற்றி கோடங்கிபட்டி கிராமத்தினருக்கு தெரியவந்தது.இதனையடுத்து ஆலமரத்துப்பட்டி சென்றுவிட்டு திரும்பிய அந்த பஸ்சை கோடங்கிப்பட்டியில் பொதுமக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தரக்குறைவாக பேசுவதாக குற்றச்சாட்டு
அப்போது பொதுமக்கள் தமிழக அரசின் இலவச கட்டணத்தில் பயணம் செய்யும் பெண்களை இந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஓசி பயணம் என்றும், தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
பணியிடை நீக்கம்
அதனைத்தொடர்ந்து பெண்ணை அரசு பஸ்சில் ஏற்றாத டிரைவர் பன்னீர்செல்வம் மற்றும் கண்டக்டர் மகேந்திரன் ஆகியோரை கரூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.மேலும் பணியிடை நீக்கத்திற்கு பிறகு டிரைவர் காரைக்குடி மண்டலத்திற்கும், கண்டக்டர் தேவகோட்டைக்கும் பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.