லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர்-கண்டக்டர் பலி


லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர்-கண்டக்டர் பலி
x

லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர்-கண்டக்டர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர்

லாரி மீது அரசு பஸ் மோதியது

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு அரசு பஸ் பயணிகளுடன் திருச்சிக்கு புறப்பட்டது. பஸ்சை திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, பெருவளப்பூர் கீழத் தெருவை சேர்ந்த தேவேந்திரன் (வயது 40) என்பவர் ஓட்டினார். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, அய்யப்பநாயக்கன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த முருகன் (56) என்பவர் பஸ்சில் கண்டக்டராக இருந்தார்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் சின்னாறு என்ற பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் அதே சாலையில் முன்னால் திருச்சி நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரிமீது பயங்கரமாக மோதியது.

டிரைவர்-கண்டக்டர் பலி

இதில் லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் பஸ்சின் உள்ளே சொருகின. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த டிரைவர் தேவேந்திரன் உடல் நசுங்கி இறந்தார். அதேபோல், கண்டக்டர் முருகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

11 பயணிகள் காயம்

மேலும் பஸ்சின் முன்பக்கம் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்த திருச்சி காட்டூரை சேர்ந்த வினோத் (19), பெரம்பலூர் திருமாந்துறையை சேர்ந்த அபிநயா (17), அவரது தாய் செவ்வந்தி ரோஜா, திருச்சி பாலக்கரையை சேர்ந்த மரியஜோசப் (42) உள்பட 11 பேர் காயமடைந்தனர். விபத்து பற்றி தகவலறிந்த மங்களமேடு போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பஸ்சின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த டிரைவர் தேவேந்திரன், கண்டக்டர் முருகன் ஆகியோரின் உடல்களை பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மருத்துவமனை பிரேத கூடத்தில் இருந்த தேவேந்திரன், முருகன் ஆகியோரின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

இந்த விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருச்சி மாவட்டம் கொணலை அருகே ஆய்க்குடியை சேர்ந்த பாலன் (49) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story